நள்ளிரவில் விளைநிலத்தில் புகுந்து காட்டு யானை தாக்கியதால் படுகாயமடைந்த விவசாயி!

சத்தியமங்கலம் அருகே விளைநிலத்தில் புகுந்த காட்டு யானை ஒன்று தோட்டத்தில் காவலுக்காக படுத்திருந்த விவசாயியை தூக்கி வீசி மிதித்ததால் விவசாயி படுகாயமுற்றார்.
சத்தியமங்கலத்தில் இருந்து 13 கி.மீ.,க்கு அப்பால் உள்ள ராமபைலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அம்மாசைக்குட்டி (62). இவருக்குச் சொந்தமான விவசாய நிலம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த நிலத்திலேயே தனது மனைவி தேவிமணி (55)யுடன் வீடு கட்டி அங்கு வசித்து வருகிறார்.
இவர்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் வாழை, மஞ்சள் போன்ற பயிர்களை சாகுபடி செய்துள்ளார்.

மயங்கிக் கிடக்கும் அம்மாசைக்குட்டி

இந்தப் பயிர்களை பாதுகாப்பதற்காக வீட்டின் முன்பகுதியிலேயே கட்டிலை போட்டு படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் தோட்டத்தில் கட்டியிருந்த நாய் வெகுநேரமாக குரைத்துக் கொண்டே இருந்தது. சத்தம் கேட்டு கண் விழித்த அம்மாசைக்குட்டி டார்ச் லைட்டை எடுத்து அடித்து பார்த்தார்.

அப்போது தோட்டத்துக்குள் காட்டு யானை ஒன்று நின்று கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். டார்ச் லைட் வெளிச்சத்தைக் கண்டதும் அவரை நோக்கி அந்த யானை ஓடி வந்தது.
யானையிடம் இருந்து தப்பிச் செல்வதற்காக இருளில் அம்மாசைக் குட்டி ஓடிய போது கால் இடறி கீழே விழுந்தார். அருகில் வந்த யானை கோபத்தில் அம்மாசைக்குட்டை தும்பிக்கையால் தூக்கி கீழே போட்டு அவரது காலை மிதித்தது.

அம்மாசைக்குட்டி

வலி வேதனையில் அவரது அலறல் சத்தத்தால் மிரண்டு போன யானை வனப்பகுதிக்குள் சென்று விட்டது.
யானை மிதித்தில் காலில் படுகாயமுற்ற விவசாயி அம்மாசைக்குட்டியை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி விவசாயிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.