நாக்பூர்: நாக்பூர் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அத்துடன் மெட்ரோ இரண்டாம் கட்டப் பணிகளுக்காக அடிக்கல் நாட்டினார். ரூ.6700 கோடி செலவில் மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது.
நாக்பூர் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கிவைத்த பிரதமர் மோடி ஃப்ரீடம் பார்க்கில் இருந்து காப்ரி வரைக்கும் அதில் பயணித்தார். அப்போது அவர் மாணவர்களுடன் உரையாடினார்.
முன்னதாக இன்று காலை நாக்பூர்-பிலாஸ்பூர் இடையேயான வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை, நாக்பூர் ரயில் நிலையத்தின் 1ம் எண் பிளாட்பாரத்தில், பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
வந்தே பாரத் விரைவு ரயிலின் பெட்டிகள், மற்றும் அதில் பயணிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளையும் முன்னதாக பிரதமர் ஆய்வு செய்தார். வந்தே பாரத் விரைவு ரயிலின் கட்டுப்பாட்டு மையத்திலும், ஆய்வு மேற்கொண்ட மோடி, நாக்பூர் மற்றும் அஜ்னி ரயில் நிலையங்களின் மேம்பாட்டுப் பணிகளையும் பார்வையிட்டார். இந்த புதிய ரயில்சேவை மூலம் நாக்பூர்-பிலாஸ்பூர் இடையேயான பயண நேரம், 7-8 மணி நேரத்தில் இருந்து 5 மணி 30 நிமிடங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நாக்பூர்-பிலாஸ்பூர் இடையேயான வந்தே பாரத் விரைவு ரயில் சேவையைக் கொடியசைத்துத் துவக்கிவைக்கப்பட்டது. இதன் மூலம் ரயில்வே இணைப்பு கணிசமாக அதிகரிக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமருடன், மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, அம்மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, துணை முதலமைச்சர் திரு. தேவேந்திர பட்னவிஸ், மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
தொடர்ந்தும் இன்று மாலை நாக்பூரில் ஒரு பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். நாக்பூர் ரயில் நிலையம், அஜ்னி ரயில் நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதுமட்டுமல்லாது நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஒன் ஹெல்த் மையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.