பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, ஏராளமான திட்டங்களை தொடங்கி வைத்தும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் மகாராஷ்டிரா, கோவா ஆகிய மாநிலங்களுக்கு சென்றுள்ளார்.
அதன்படி, மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மற்றும் சத்தீஸ்கர் மாநில பிலாஸ்பூர் இடையேயான வந்தே பாரத் விரைவு ரயிலை பிரதமர் மோடி நாக்பூர் ரயில்நிலைத்தில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வின் போது, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர ஃபட்நவிஸ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
இதையடுத்து, நாக்பூர் மெட்ரோ ரயில் சேவையின் முதல் கட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, இரண்டாம் கட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, மெட்ரோ ரயிலில் பயணம் செய்வதற்கான டிக்கெட்டை வாங்கிய பிரதமர் மோடி, பொதுமக்களுடன் இணைந்து மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். அப்போது, மாணவர்கள் மற்றும் உள்ளூர் மக்களுடன் அவர் கலந்துரையாடினார். ‘நாக்பூர் மெட்ரோவில் சுவாரஸ்யமான கலந்துரையாடல்’ நடைபெற்றதாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து பிரதமர் மோடி நாக்பூரில் 75,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார். விதர்பா நகரில் நடைபெறும் விழாவில், ரூபாய் 1,500 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
மேலும், சுகாதார ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் வகையில், உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில் மைல்கல் திட்டமாக, நாக்பூரில் தேசிய ஒற்றை சுகாதார நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டுவதுடன், நாக்பூரில் ரத்தக் குறைபாடுகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் நிர்வகித்தல் குறித்த மத்திய ஆராய்ச்சி நிறுவனத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
இதையடுத்து, கோவா செல்லும் பிரதமர் மோடி அங்கும் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, மோபா சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கவுள்ளார்.