தெலுங்கானாவில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட ஒய்.எஸ்.ஆர்.டி.பி. கட்சி தலைவர் சர்மிளா மயக்கம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
தெலுங்கானாவில் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்த நிலையில், ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா என்ற பெயரிலான கட்சியை, ஆந்திர பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியான சர்மிளா ரெட்டி தனியாக தொடங்கி நடத்தி வருகிறார்.
இந்நிலையில், தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவுக்கு எதிராக அவரது இல்லத்திற்கு முன் போராட்டம் நடத்துவதற்காக சர்மிளா ரெட்டி கடந்த மாதம் இறுதியில், காரில் புறப்பட்டு சென்றார். இதுபற்றி அறிந்த போலீசார் காரில் சர்மிளா அமர்ந்து இருந்தபோதே, அவரை வழிமறித்து கிரேன் கொண்டு காரை தூக்கி சென்றனர். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து எஸ்.ஆர். நகர் காவல் நிலையத்தில் சர்மிளா சிறை வைக்கப்பட்டார். தனது மகளை பார்ப்பதற்காக புறப்பட்ட சர்மிளாவின் தாயார் ஒய்.எஸ். விஜயம்மாவும் தெலுங்கானா போலீசாரால் வீட்டு காவலில் சிறை வைக்கப்பட்டார். இது தெலுங்கானா அரசியலில் பரபரப்புடன் பேசப்பட்டது.
இந்நிலையில் தனது பாதயாத்திரைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என கோரி கடந்த இரு தினங்களுக்கு முன் அவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். நீதிமன்றம் அனுமதி உள்ளபோதும், போலீசாரின் அனுமதியை பெறாத சூழலில், அம்பேத்கார் சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்ட அவரை கட்டாயப்படுத்தி வீட்டுக்குள் போலீசார் அனுப்பி வைத்தனர்.
இதனை தொடர்ந்து, நேற்று 2-வது நாளாக வீட்டில் இருந்தபடி உண்ணாவிரத போராட்டத்தில் அவர் ஈடுபட்டார். தெலுங்கானாவில் ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும். எனது பாதயாத்திரைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என அவர் கூறினார்.
இந்நிலையில், 3-வது நாளாக இன்று காலை அவரது காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. எனினும், சற்று மயக்கமடைந்த நிலையில், ஒய்.எஸ். சர்மிளா உடனடியாக ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் தெலுங்கானா அரசியல் களம் பரபரப்புடன் காணப்படுகிறது.
newstm.in