”பாஜகவில் சேரவா, வேண்டாமா? என மக்களிடம் கேட்பேன்” – குஜராத்தில் ஆம் ஆத்மி எம்எல்ஏ பல்டி!

குஜராத் தேர்தலில் முதல் முறையாக களமிறங்கிய ஆம் ஆத்மி 5 இடங்களை மட்டும் கைப்பற்றியது. எதிர்பார்த்த வெற்றி கிடைக்காத நிலையில், ஆம் ஆத்மியின் வெற்றி எம்எல்ஏ-க்கள் பாஜகவின் பக்கம் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடைபெற்ற குஜராத் மாநில தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் 30-க்கும் மேற்பட்ட பேரணிகள் மற்றும் அதன் தலைமை அமித் ஷாவின் முழுமையான பிரச்சாரத் திட்டத்தின் உதவியால் பாஜக, மாநிலத்தின் 182 இடங்களில் 53 சதவீத வாக்குகளுடன் 156 இடங்களை கைப்பற்றி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது.
image
2017-ஆம் ஆண்டு குஜராத் தேர்தலில் 77 இடங்களில் வெற்றி பெற்று, பாஜகவை 100 இடங்களுக்குள் கட்டுபடுத்திய காங்கிரஸ், இந்த முறை வெறும் 17 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி கட்சி, மிகப்பெரிய அளவில் பிரச்சாரத்தை மேற்கொண்டபோதும் 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. மாநிலத்தில் ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்களான, மாநில தலைவர் கோபால் இத்தாலியா, படிதார் தலைவர் அல்பேஷ் கதிரியா மற்றும் முதல்வர் முகமான இசுதன் காத்வி ஆகியோர் தோல்வியை சந்தித்துள்ளனர். இருப்பினும் 12.3 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது ஆம் ஆத்மி. இந்த வாக்கு சதவீதம் நிச்சயம் காங்கிரஸை பாதித்து இருக்கும்.
image
இந்நிலையில், ஆத் ஆத்மி சார்பாக வெற்றிபெற்ற 5 எம்எல்ஏ-க்களும் பாஜகவில் இணையவிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இதுகுறித்து வெற்றிபெற்ற 5 எம்எல்ஏ-களில் ஒருவரான பூபத் பயானி, தான் அதிகாரப்பூர்வமாக வெளியே செல்லவில்லை என்று மறுத்துள்ளார். ஆனால் “மக்களின் கருத்தை” மேற்கோளாக பார்க்கபோவதாக இரட்டை மனநிலையில் தெரிவித்துள்ளார்.
பாஜகவில் இணைவது குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசியிருக்கும் எம்எல்ஏ பயானி, “நான் பாஜகவில் சேரவில்லை…ஆனால் பாஜகவில் சேரலாமா வேண்டாமா என்று மக்களிடம் கேட்பேன்” என்று கூறியுள்ளார்.
image
இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி 90 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று கூறியிருந்த ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், அடுத்த முறை மாநிலத்தில் வெற்றி பெறுவோம் என உறுதியளித்துள்ளார். இதுகுறித்து பேசியிருக்கும் கெஜ்ரிவால், “குஜராத் பாஜக கோட்டையாகக் கருதப்படுகிறது. நாங்கள் சுமார் 13 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளோம். எங்களை நம்பி, முதன்முறையாக வாக்களித்த ஏராளமானோர் உள்ளனர். இம்முறை, கோட்டையை உடைத்தோம், அடுத்த முறை, உங்கள் ஆசியுடன் நாங்கள் வெற்றி பெறுவோம்,” என்றார்.
மற்றும் ஆம் ஆத்மியின் குஜராத் தலைவர் கோபால் இத்தாலியா கூறுகையில், ஆம் ஆத்மி கட்சியின் செயல்திறனை “பாஜகவின் குஜராத் கோட்டைக்குள் பிரமிக்க வைக்கும் நுழைவு” என்றும், இது திரு கெஜ்ரிவாலின் “நேர்மையான அரசியலின் வெற்றி என்றும் கூறினார். மேலும் சத்தீஸ்கர், கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் உட்பட அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள பெரும்பாலான மாநிலங்களில் ஆம் ஆத்மி போட்டியிட திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.