பாபா ரீ ரிலீஸ் முதல் நாள் வசூல்… அப்செட்டில் ரஜினி?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதை, திரைக்கதை எழுதி தயாரித்த படம் பாபா. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான இந்தப் படமானது அப்போது படுதோல்வியடைந்தது. ஆன்மீகத் தன்மையோடு வெளியான படத்தை ரஜினி ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாததாலும், படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் ரசிகர்களுடன் கனெக்ட் ஆகாததும்தான் தோல்விக்கு காரணம் என கூறப்பட்டது. பெரும் தொகை கொடுத்து வாங்கிய விநியோகஸ்தர்கள் எல்லாம் போர்க்கொடி தூக்க அவர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் பணத்தையும் கொடுத்தார் ரஜினி. இப்படி பாபா படம் ரஜினிக்கு மறக்க முடியாது பல துன்ப நினைவுகளை கொடுத்திருக்கிறது.

இருப்பினும் பாபா படம் ரஜினிக்கு கனவு படம் என்றே கருதப்படுகிறது. இந்தச் சூழலில் காந்தாரா போன்ற ஆன்மீகமும் பேண்டஸியும் கலந்த படங்கள் சமீபத்தில் பெற்ற வரவேற்பை பார்த்து பாபாவை ரீ ரிலீஸ் செய்ய ரஜினி திட்டமிட்டார். இதற்காக ஏ.ஆர். ரஹ்மான் சில காட்சிகளுக்கு புதிதாக இசையமைக்க, ரஜினி சில காட்சிகளுக்கு புதிதாக டப்பிங் பேச படம் டிஜிட்டல் முறையில் மெருகேற்றப்பட்டது. மேலும், படத்தின் க்ளைமேக்ஸும் மாற்றப்பட்டு, பாடலில் இருந்த சில வரிகளும் தூக்கப்பட்டன.

இப்படி பட்டி டிங்கரிங் பார்க்கப்பட்டு பாபா படம் நேற்று திரையரங்குகளில் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டது. இதனையடுத்து ரஜினி ரசிகர்கள் பாபா தரிசனத்திற்காக திரையரங்குகளுக்கும் சென்றனர். ஏற்கனவே படுதோல்வியடைந்த படம் என்பதால் எந்தவித எதிர்பார்ப்புமின்றி சென்றவர்களுக்கு நினைத்தபடியே எந்த சர்ப்ரைஸும் கொடுக்கவில்லை. இதனால் நேற்று முதல் காட்சிக்கு பிறகு ரசிகர்கள் கூட்டம் ஓரளவே கூடியது. 

இந்நிலையில் பாபா படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் தெரியவந்திருக்கிறது. அதன்படி பாபா படமானது தமிழ்நாட்டில் முதல் நாளில் 80 லட்சம் ரூபாய் மட்டுமே வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. 7 கோடி ரூபாயை முதல் வாரத்தில் வசூலித்தாலே போதும் என கணக்கு போட்டிருந்த ரஜினிக்கு முதல் நாள் வசூல் நிலவரம் பெரும் அப்செட்டை தந்திருப்பதாக கோலிவுட்டில் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன. அதுமட்டுமின்றி மீண்டும் ரிஸ்க் எடுத்த ரஜினிக்கு இந்த முறையும் பாபா கைகொடுக்கவில்லை என்கின்றனர் விவரமறிந்தவர்கள். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.