வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டி:
குஜராத் தேர்தல் முடிவு எதிர்பார்த்த ஒன்று தான். காங்., ஓட்டுகளை ஆம் ஆத்மி பிரித்ததால், அங்கு பா.ஜ., வெற்றி பெற்று உள்ளது. இதேபோன்று ஓட்டுகள் சிதறாமல் இருக்க, எதிர்க்கட்சிகள் ஒரே அணியாக இணைந்து, பா.ஜ., தனித்து தேர்தலை சந்தித்தால் மட்டுமே, நாம் வெற்றி பெற முடியும். ஹிமாச்சல பிரதேசத்தில் காங்., வெற்றி பெற்றுள்ளது. ஆனால், அவர்களை ஆட்சியில் அமரச் செய்வரா என்பது சந்தேகம்.
ஆம் ஆத்மி இந்த தேர்தலில் தானே, குஜராத்தில் களம் இறங்கியது… பா.ஜ., இதற்கு முன் ஆறு தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளதை வசதியாக மறைக்கிறாரே!
இசையமைப்பாளர் சங்கத் தலைவர் தினா பேட்டி:
தமிழ் மொழி, இசை, கலாசாரம், கலைகள், பண்பாடு ஆகியவற்றை உலகம் எங்கும் பரப்புவோம். குறிப்பாக, வெளிநாடு வாழ் தமிழர்களின் பிரச்னைகளை தீர்ப்போம். பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்தி, அதன் வாயிலாக தமிழை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வோம்.
தமிழகத்தில், பா.ஜ., வெற்றிக்காக உழைப்போம்.’இசையால் வசமாகா இதயம் எது’ என்பது போல, உங்க முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள்!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கமணி பேச்சு:
தி.மு.க.,வின், 18 மாத ஆட்சியில், சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், சாதாரண மக்கள் பாதிக்கப்படும் வகையில், பால் விலை, மின் கட்டணம், சொத்து வரியை உயர்த்தி உள்ளனர். அனைத்து அமைச்சர்களும் கொள்ளை அடிப்பதையே குறிக்கோளாக கொண்டு செயல்படுகின்றனர். அதை தட்டிக் கேட்க முடியாத நிலையில், முதல்வர் ஸ்டாலின் உள்ளார். 2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுக்கு ஒரு ‘சீட்’ கூட கிடைக்காது.
உங்க கூட்டணி கட்சியான பா.ஜ., ‘2024 லோக்சபா தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் வரும்’னு அடிச்சு சொல்றாங்க… நீங்க அதை நம்பாம, 2026 வரைக்கும் காத்திருக்க தயாராகிட்டீங்களா?
மக்கள் நீதி மய்யம் மாநில செயலர் செந்தில் ஆறுமுகம் அறிக்கை:
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகேயுள்ள அல்லிகுண்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக் கட்டடம் பழுதடைந்த நிலையில் உள்ளது. மாநிலம் முழுதும் ஏராளமான அரசு பள்ளிக் கட்டடங்கள், இந்த லட்சணத்தில் தான் உள்ளன. கல்வித் துறைக்கு ஆண்டுக்கு, 37 ஆயிரம் ரூபாய் கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக, தமிழக அரசு பெருமைப்பட்டுக் கொள்கிறது. ஆனால், பள்ளிக் கட்டடங்கள் மிகவும் சேதமடைந்தும், இடிந்து விழும் நிலையிலும் இருப்பது ஏற்கத்தக்கதல்ல.
‘நெல்லுக்கு பாயும் நீர் புல்லுக்கும் பாயும்’னு தான் வழக்கமாக சொல்வாங்க… ஆனா, இவங்க ஒதுக்குற நிதி வெறும் புல்லுக்கு மட்டும் தான் பாயும் போலிருக்குது!
சட்டசபை காங்., தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி:
தமிழக காங்., தலைவரை மாற்றச் சொல்வதன் பின்னணியில், தி.மு.க., இல்லை. தமிழக காங்., தலைவர் பதவியை கார்த்தி எம்.பி., கேட்டுள்ளார். அவர், ‘கட்சியை ஒருங்கிணைத்து அமைதியை ஏற்படுத்துவேன்’ என்றும் தெரிவித்துள்ளார். அதை, அகில இந்திய தலைமை தான் முடிவு செய்ய வேண்டும்.
தப்பித் தவறி, கார்த்திக்கு தலைவர் பதவியை தந்துட்டாலும், அவர் சுதந்திரமாக செயல்பட உங்க கட்சி கோஷ்டிகள் விடுமா, என்ன?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அறிக்கை:
‘மாண்டஸ்’ புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தங்கும் இடம், உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகளை, உடனே நிறைவேற்ற வேண்டும். வீடு, உடைமைகளை இழந்து, வாழ்வாதாரம் பாதிப்படைந்தவர்களுக்கு, உரிய நிவாரண உதவிகளை அளிக்க வேண்டும். பள்ளி, கல்லுாரி மாணவர்கள் இடையே எந்தவித வேறுபாடும் பார்க்காமல், அனைவருக்கும் முன்கூட்டியே விடுமுறை அளித்து, அவர்களுக்கு சிரமம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இவரது அறிக்கையில், ‘வேண்டும் வேண்டும்’ என்ற வார்த்தைகள் தான் அதிகமாக இருக்கிறது… ‘கொடுப்போம்’ என்ற எண்ணமே இவருக்கு வராதோ?
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை:
முன்னாள் பிரதமரை கொன்ற குற்றவாளி, மாணவர்கள் மத்தியில், ‘மறுக்கப்பட்ட நீதி’ என்ற தலைப்பில் உரையாற்றப் போவதை, நீதிமன்றம் வேடிக்கை பார்க்கிறது. காங்கிரஸ் கட்சியும், அறிந்தும் அறியாதது போல, பதவிக்காக, அரசியலுக்காக, சொந்தக் கட்சி தலைவரை கொன்றவர்களை கொண்டாடும் கும்பலின் ஆர்ப்பரிப்பை வேடிக்கை பார்க்கிறது; இது, தமிழகத்திற்கு நல்லதல்ல. மிகப்பெரும் சதிக்கு வித்திடும் துவக்கமாக இருந்தாலும், விரைவில், இதற்கு ஒரு முடிவுரை எழுதப்படும்.
‘எதிர்ப்பு தெரிவிச்சா மட்டும், இறந்த தலைவர் எழுந்து வந்துடுவாரா… நம்ம வண்டி ஓடணுமே’ எனக் கருதி, காங்கிரஸ்காரங்க ‘கம்’முன்னு இருக்காங்க போலும்!
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:
பொள்ளாச்சி அருகே, ‘ஆன்லைன்’ சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால், சல்மான் என்ற இளைஞர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் தொடர்பாக, கவர்னர் எழுப்பிய கேள்விகளுக்கு நவம்பர், 25-ம் தேதியே, தமிழக அரசு விளக்கம் அளித்து விட்டது. அதன்பின் இரு வாரங்களாகி விட்ட நிலையில், சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது நியாயமல்ல.
இந்த சட்டத்துக்கு ஒப்புதல் தரணும்னு, அ.தி.மு.க.,வினர் கூட கவர்னரை பார்த்து பேசிட்டாங்க… நீங்களும், ஒரு எட்டு ராஜ்பவன் போய் வலியுறுத்திட்டு வாங்க!
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்