பிக் பாஸ் 6 நாள் 62: வெளியேறப் போகும் மற்றொரு பெண் போட்டியாளர்; கமல் சொன்ன `அன்னம்' பழமொழி!

‘டிவிங்கிள் ஸ்டார்’ டாஸ்க்கில், சன்மானம் தரும் விஷயத்தில் சார்பு அரசியலும், பதில் மொய் கலாசாரமும் தலைவிரித்தாடியது என்பதை ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தோம். விருது வழங்குதலின் போது இது அப்படியே தலைகீழாக மாறி விட்டது. சன்மானம் அதிகமாக வாங்கியவர்கள்தான் விருதிலும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது நிகழவில்லை.

கமல்

இது தொடர்பான விசாரணையின் போது ‘ஒரு கலைஞனை சக கலைஞன்தானே முதலில் அங்கீகரிக்க வேண்டும்..?! கலைஞனாக ஆவதற்கு முதல் தகுதியே ஒரு நல்ல ரசிகனாக இருப்பதுதான். திறமைக்குத்தான் முதல் இடம் அளிக்கப்பட வேண்டும். நல்ல ரசிகர்கள் இருந்தால்தான் நல்ல சினிமாக்கள் உருவாகும்’ என்று கமல் அறிவுறுத்தியது சிறப்பு. அவரது சில நல்ல திரைப்படங்களும் அப்படித்தான். வெளியாகும் போது கலெக்ஷன் வராது. ஆனால் விருதுகள் பெறும். காலம் கடந்துதான் பாராட்டுவார்கள்.

நாள் 62-ல் நடந்தது என்ன?

கண்ணை அடிக்கும் கத்தரிப்பூ கலர் Turtle-neck T-shirt-ல் வந்தார் கமல். ‘வையத் தலைமை கொள்’ என்பார்கள். ஜி20 மாநாட்டில் இந்தியா தலைமையேற்றிருப்பது நமக்குப் பெருமை. பொறுப்பும் கூட. வீட்டிலும் சற்று அமைதி காணப்படுகிறது. கலை நிகழ்ச்சியில் தங்கள் திறமைகளைக் காட்டுவதில் பிஸியாகி விட்டார்கள்’ என்கிற முன்னுரையுடன் வெள்ளிக்கிழமை நிகழ்வுகளை காண்பித்தார்.

‘அவ்ளோ அறிவாளிங்களா இருந்திருந்தா’ன்னு நீ சொன்னது தப்பு. மத்தபடி உன் நடிப்பு நல்லாத்தான் இருந்தது’ என்று ஜனனிக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார் அமுதவாணன். இதே தலைப்பில் அசிமும் விக்ரமனிடம் ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்க “அறிவாளி –ன்றதுக்குப் பதிலா அக்கறை-ன்னு சொல்லியிருந்தா.. பிரச்சினை ஆகியிருக்காது” என்றார் விக்ரமன். ‘அசிமிற்கு மட்டும் கோபம் வரலாமா?’ என்று அப்போதும் முதிர்ச்சியில்லாமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தார் ஜனனி.

மைனா – ஏடிகே

இன்னொரு பக்கம் வேறொரு குழு விக்ரமனைப் பற்றி பேசிக் கொண்டிருந்தது. “என்னைப் பாராட்டவே மாட்டீங்கன்னு விக்ரமன் சொல்றாரு. ஏகாம்பரி புள்ளைங்க நாடகத்துல அவரைப் பாராட்டினோம். வக்கீல் டாஸ்க்ல அவருக்குத்தான் பெஸ்ட் ஃபர்ஃபாமர் தந்தோம். அசிமை வேணா அவரது கோபம் காரணமா ஒதுக்கி வெச்சோம்-ன்னு சொல்லலாம். ஆனா அசிம் உடனே மிங்கிள் ஆயிடுவாரு” என்றெல்லாம் மணிகண்ட்டாவின் தலைமையில் பேசிக் கொண்டிருந்தார்கள். விக்ரமனிடம் ஷிவின் வந்து பேசிக் கொண்டிருந்தார். ஆனால் அவர் கழுத்தில் ‘Boring performer’ பலகை காணப்படவில்லை. விக்ரமன் மட்டும் அணிந்து கொண்டிருந்தார்.

தானும் ஏடிகேவும் இறுதிக்கட்டம் வரைக்கும் வந்த கனவைப் பற்றி சொல்லி உசுப்பேற்றிக் கொண்டிருந்தார் அமுதவாணன். பிறகு காவலாளியால் இருவரும் வெளியே துரத்தப்பட்டார்களாம். ‘கனவுல வந்தா அது உண்மையா ஆயிடும்ல” என்று அமுதவாணனின் கனவில் கூடுதல் வெந்நீரை ஊற்றி மகிழந்தார் தனலஷ்மி. மிக்ஸியை மைனாவிற்கு பரிசளித்து மகிழ்ந்தார் மணிகண்டன்.

நையாண்டி ஊசியை மணிகண்ட்டாவிற்கு போட்ட கமல்

அகம் டிவி வழியாக உள்ளே வந்த கமல், எடுத்த எடுப்பிலேயே அமுதவாணனின் நடிப்பைப் பாராட்டினார். ‘அதே செக்யூரிட்டிதான் உங்களைக் கூட்டிட்டு வந்து ‘இவர் நல்லா நடிச்சாரு’ன்னு சொன்னாரு. மிஸ்டர் வேதா. நல்லா பண்ணீங்க’ என்று கமல் பாராட்ட, நெகிழ்ந்து போனார் அமுதவாணன்.

உண்மையில் கமல் வந்தவுடனேயே மக்கள் இதைச் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் கமலே வாய் விட்டு ‘சாப்பாடு நல்லாயிருந்ததா. சொல்லவேயில்லையே?’ என்று கேட்க வேண்டியதாக இருந்தது. ‘அய்யோ… சார் பிரான்.. சிக்கன்லாம் செம..’ என்று மக்கள் பாராட்டினார்கள். மூன்றாவது முறையாக தலைவராகியிருக்கும் மணியை பாராட்டிய கமல் “ஏதாவது புதிய மாற்றங்கள் செஞ்சீங்களா?” என்று கேட்க, அசடு வழிந்த மணி “பிளேட்லாம் கழுவினாங்க. மத்தபடி ஃபன்னா இருந்தது’ என்று எதையோ சொல்லி சமாளித்தார். இந்தச் சந்தர்ப்பத்திற்காகவே காத்திருந்த விக்ரமன் எழுந்து ‘ஒரு மாற்றமும் இல்லை. வெளில காஞ்சிட்டு இருந்த துணி உள்ளே வந்தது. அவ்வளவுதான்’ என்று கச்சிதமாகப் போட்டுக் கொடுத்தார்.

ஏடிகே – மணி

“அவங்க.. அவங்க வேலையைப் பார்த்தாங்க” என்று தனலஷ்மி சொல்ல “அப்ப கேப்டன் எதுவும் செய்யலை.. அதானே?” என்று ஜாலியாக போட்டு வாங்கினார் கமல். ‘தலைவர் போட்டில உங்க போராட்டம் நல்லாயிருந்தது’ என்று கமல் பாராட்ட, தனலஷ்மியிடமிருந்து அரைசென்டி மீட்டர் புன்னகை வந்தது. “மணி.. மூன்றாம் முறை தலைமை என்பது ஒரு பொறுப்பு. Fun இல்ல. ஃபுட் ரேஷன்ல குறை இருந்தது. வீடும் சுத்தமா இல்ல. நாம பளபள –ன்னு போடற டிரஸ் மாதிரியே வீடும் சுத்தமா இருக்கணும்.. இல்லையா?’ என்று கமல் சுட்டிக் காட்ட, சங்கடத்தில் நெளிந்தார் மணி. “வீட்டுக்குள்ள உங்களுக்கு பலத்த சப்போர்ட் இருக்கு” என்று கமல் நையாண்டி ஊசியால் குத்தியது மணிக்குப் புரிந்ததா என்று தெரியவில்லை.

‘அன்னத்துக்குப் பிறகுதான் அண்ணன் – தம்பி’ – கமலின் புதுமொழி

அடுத்ததாக வீக்லி டாஸ்க்கிற்கு நகர்ந்த கமல், சைக்கிள் ஜாக்சனின் நடனத்தையும் ஷிவின், அசிம் நடிப்பையும் மனமார பாராட்டினார். “ஏடிகே போகானாந்தாவாகவே மாறிட்டாரு. ரச்சிதா அழும் போது கூட கேரக்ட்டர்ல இருந்தாங்க” என்று பாராட்டிய கமல் “அது கோப்பால் இல்ல. பாதாம் பால்” என்று பின்குறிப்பாக சொல்லிய கமெண்ட் சிறப்பு. “உங்க முயற்சியும் ரொம்ப நல்லா இருந்தது ராம். மைனா…. காமெடி உங்க ஏரியா. சொல்லவே வேணாம்” என்று பாராட்டி விட்டு அமுதவாணனுக்கு நகர்ந்தார். “குறைவான வசதியில் சிறந்த ஒப்பனைகளை மேற்கொள்கிறவர்களை எப்போதுமே எனக்குப் பிடிக்கும். அந்த வகையில் அமுதவாணன் செஞ்ச முயற்சிகள் சிறப்பானவை” என்று பிரத்யேகமாகப் பாராட்ட “நீங்கதான் இதுக்கு முன்னோடி. இது எனக்கு மறக்க முடியாத நாள்” என்று நெகிழ்ந்தார் அமுதவாணன்.

அமுதவாணன்

“வெளில உக்காந்து சாப்பிட்டதுக்கு ஒரு காரணம் சொன்னீங்கள்ல. அதச் சொல்லுங்க..’ என்று கமல் எடுத்துக் கொடுத்தவுடன் “படத்துல எம்.ஆர்.ராதா அப்படித்தான் பண்ணுவாரு. மத்தவங்களுக்கு அருவருப்பா தெரியக்கூடாதுன்னுதான் வெளில இருந்தேன்” என்று அமுதவாணன் சொல்ல “அந்த நல்ல மனதுக்கு பாராட்டு” என்று குறிப்பிட்டு பாராட்டினார் கமல். தொழுநோய் குறித்து பொதுப்புத்தியில் இருக்கும் எதிர்மறைத்தன்மையை, இந்த சித்தரிப்பு அப்படியே பிரதிபலிப்பது குறித்து விழிப்புணர்வாக கமல் ஏதாவது சொல்வார் என்று எதிர்பார்த்தேன். ஏனோ சொல்லவில்லை.

“நான் ஊட்டி வளர்த்த ஜனனி கூட என்னை விசாரிக்காம உள்ளே ரவுண்டு கட்டி சாப்பிட்டுட்டு இருந்தாங்க சார்” என்று அமுதவாணன் ஜாலியாக புகார் சொல்ல, ‘அன்னத்துக்குப் பிறகுதான் அண்ணன் – தம்பிலாம்’ என்று புதுமொழி சொல்லி கிண்டலடித்தார் கமல்.

‘யார்.. யார் அந்த கபட நாடக வேடதாரிகள்?’

ஒரு பிரேக் முடிந்து கமல் திரும்பிய பிறகு ஸ்டோர் ரூமில் இருந்து ஒரு புது அயிட்டம் வந்து இறங்கியது. ‘அறுபது நாட்களைக் கடந்தும் தன் வேஷத்திலிருந்து மாறாமல் இருக்கும் கபட நாடக வேடதாரி யார்? அவங்களுக்கு மரு வெச்சு அடையாளம் காட்டுங்க” என்று டாஸ்க் தந்தார் கமல். மிக உற்சாகமாக முதலில் எழுந்த அசிம், ரச்சிதாவை சுட்டிக் காட்ட, பிறகு வந்த பலரும் அதையே பின்பற்றினார்கள். “சீரியல்ல பார்த்தீங்கன்னா.. அவ்ள ஆக்டிவ்வா இருப்பாங்க. ஆனால் வீட்ல பார்த்தா அவ்வளவு அமைதி” என்றார் அசிம். ஒருவர் திரையில் நடிப்பதைப் போலவே அசலான வாழ்க்கையிலும் இருப்பார் என்பதை அசிமுமா எதிர்பார்க்கிறார்?!

ரச்சிதாவிற்கு அடுத்தபடியாக விக்ரமனிற்கும் மருக்கள் அதிகமாக கிடைத்தன. “காமிரா கான்ஷியஸா இருக்காரு. எப்பவும் நியாயம் பேசறாரு. வெளிலயும் அப்படி இருப்பாரான்னு தெரியல’ என்று தனலஷ்மி சொல்ல “வெளில என்னைப் பார்த்திருக்கீங்களா?’ என்று அவரை மடக்கினார் விக்ரமன். எப்பவும் காமெடி செய்யும் மைனாவிற்கும் மருக்கள் கிடைத்தன. “ஒரு மனுஷன்னா.. ஆதாரமா சில உணர்ச்சிகள் வேண்டும். வெளில வரணும். இவங்க கிட்ட எதுவும் வரலை” என்று ரச்சிதாவைப் பற்றி ராம் சொன்ன போது சபை கலகலத்தது.

ரச்சிதா

மிக அதிகமான மருக்களைப் பெற்று ‘ம(ரு)ர்ம ராணியாக’ விருது பெற்ற ரச்சிதா விளக்கம் அளிக்கும் போது “ஷோவிற்காக நான் இப்படி இல்லை. என் இயல்பே அப்படித்தான். கோபமும் பட்டிருக்கேன். அதுதான் என் லிமிட்” என்று விளக்கம் அளிக்க ‘நம்பறா மாதிரியே இல்லையே’ என்கிற எக்ஸ்பிரஷனை தந்தார் கமல். அடுத்து எழுந்த விக்ரமனும் இதையே சொல்லி ‘நான் சென்சிட்டிவ். வெளிலயும் இப்படித்தான் இருப்பேன்” என்று அமர்ந்தார். அடுத்து மைனா எழ, ‘ஜோக்லாம் அடிக்கறதா இருந்தா நீங்க விளக்கம் சொல்லவே வேணாம்” என்று கமல் முன்பே ஜாலியாக எச்சரிக்க “நான் இப்படித்தான் சார். எனக்கு கோபம் வர்ற மாதிரி யாரும் டிரிக்கர் பண்ணலை’ என்று உரத்த குரலில் சொல்லி சாதித்தார்.

கமலின் தலை மறைந்ததும் “டாய்.. எனக்கும் கோபம் வரும்.. இனிமே காட்டறேன்” என்று எல்லோரிடமும் ஜாலியாக ஆவேசப்பட்டார் மைனா. தன் கேரக்ட்டர் குறித்து அசிமிடம் விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார் ரச்சிதா.

சன்மானம் அளிக்கப்பட்டதில் சார்பு அரசியல்

பிரேக் முடிந்து திரும்பிய கமல், முக்கியமான விஷயத்தை கையில் எடுத்தார். “சன்மானம்லாம் தந்துக்கிட்டீங்க. அதுல அளவுகோலா இருந்தது, திறமையா அல்லது சார்பா?” என்று வில்லங்கமான கேள்வியை எடுத்து வைக்க ‘ஃபேவரிட்டஸம் இருந்தது சார்” என்று தனலஷ்மியும் ரச்சிதாவும் அழுத்தமாகச் சொன்னார்கள். மைனாவிற்கும் மணிகண்டாவிற்கும் வழங்கப்பட்ட சன்மானத்தில் அது பிரதிபலித்தது என்று சாட்சிகள் சொல்லப்பட்டன. ‘அப்ப அதெல்லாம் திறமைக்கு மிஞ்சிய சம்பளமா?’ என்று கமல் விசாரிக்க “அன்பால வந்தது’ என்று சமாளித்தார் மணி.

“நூறு சதவீதத்திற்கு மேல ஃபேவரிட்டஸம் இருந்தது யுவர் ஆனர்” என்று கம்பீரமாக எழுந்து நின்று அழுத்தமாக சாட்சி சொன்னார் வக்கீல் கணேசன். “ரச்சிதாவிற்கு குறைவா கிடைச்சது. மணி பொதுவான ஆளுன்றதால அவருக்கு அதிகம் கிடைச்சது. அமுதவாணன் மட்டுமே சரியான தகுதியில் உள்ளவர்’ என்று ஆவேசமாகப் பேசிய அசிமும், மணிகண்டனுக்குத்தான் சன்மானத்தை அள்ளி வழங்கினார் என்பது சுவாரசியமான முரண்.

அசிம்

“எனக்கு குறைவா கிடைச்ச சம்பளத்தைப் பார்த்து கண்ணு கலங்கிடுச்சு. ஆனா அவார்டு ஃபங்ஷன்ல இது தலைகீழா மாறிடுச்சு” என்று ரச்சிதா கலங்கிய படி சொல்ல “புரியுது. எனக்கும் இது நடந்திருக்கு” என்பது போல் கமல் சொன்னதன் பின்னால் ஆயிரம் சோகங்கள் இருந்தன. “விக்ரமனுக்கும் மணிக்கும்தான் அதிக சன்மானம் கிடைச்சது. ஆனா அவங்களுக்கு விருது விழாவில் எதிர்மறையான கமெண்ட் கிடைச்சது. இது ஒரு முக்கியமான முரண்” என்று சரியான பாயிண்ட்டை ஷிவின் எடுத்து வைக்க, ஆமோதிப்பது போல் தலையாட்டினார் கமல்.

“Selected, waiting list, rejected-ன்னு மூணு ஆப்ஷன் இருந்தது. ஆனா மூணாவது ஆப்ஷனை ஏன் பயன்படுத்தவேயில்லை?” என்று கமல் கேட்டவுடன் “ரிஜக்ட் பண்ற மாதிரி யாரும் செய்யலை சார். எல்லோருமே அவங்க பெஸ்டை தந்தாங்க” என்று சொல்லி சமாளித்தார், நீதிபதிகளுள் ஒருவராக இருந்த விக்ரமன். “சன்மானத்துல நோ்மை இல்ல. மணிக்கு அதிகமா கிடைச்சது” என்றும் விக்ரமன் இணைத்து சொல்ல “நீங்க ஏன் இந்த நியாயத்தை கேட்கலை. இனிமே சொல்லிடுங்க. என்ன கூடுதலா மரு ஒட்டுவாங்க அவ்வளவுதானே?” என்று கமல் சொல்ல கையெடுத்து கும்பிட்டார் விக்ரமன்.

“விக்ரமன் மாதிரியே எல்லாத்துக்கும் கருத்து சொல்லாதீங்க” என்று முன்னர் கிண்டல் அடித்தவரும் கமல்தான். கமல் ஆரம்பத்தில் ஒருவரை குறை சொல்வது போல் பாவனை செய்கிறார் என்றால், பிறகு பாராட்டப் போகிறார் என்று அர்த்தம். இது தலைகீழாகவும் மாறும். முதலில் சர்காஸ்டிக்காக பாராட்டி விட்டு பிறகு வெளுத்து வாங்குவார். இந்த கேட்டகிரியில்தான் அசிம் அடிக்கடி மாட்டிக் கொள்வார்.

‘வாய்ப்புகள் சரியாக வழங்கப்பட்டதா?’ என்று அடுத்ததாக கமல் கேள்வி கேட்டது சரியான ஆளை நோக்கி. ‘எனக்கு வாய்ப்பே வரவில்லை’ என்று ஏற்கெனவே புழுங்கிக் கொண்டிருந்த தனலஷ்மி இப்போது ஆவேசமாக சாட்சி சொன்னார். தனலஷ்மி சொன்ன விஷயங்கள் நடந்திருக்கலாம். ஆனால் வாய்ப்பே பெறாதவர்களுக்கும் மேடை கிடைப்பதுதானே நியாயம்? தனலஷ்மியே அனைத்திலும் இருக்க வேண்டும் என்று பேராசை கொண்டால் எப்படி?!

மைனா, விக்ரமன் பிற ஹவுஸ்மேட்ஸ்

“ஓகே. வெயிட்டிங் லிஸ்ட்ல இருந்து ரிஜக்ட் ஆனவங்க.. என்ன சொல்றீங்க?” என்று கமல் விசாரணை செய்ய “தீர்ப்பில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.. நாங்க எங்க பெஸ்டை தந்தோம்” என்பது போல் ஆயிஷா, மைனா, கதிரவன், ஜனனி, ராம் ஆகியோர் வரிசையாக நின்று தங்களின் தரப்பைச் சொன்னார்கள்.

‘ஒரு கலைஞனை இன்னொரு கலைஞன்தான் முதலில் மதிக்கணும்’

“சரிய்யா.. இப்பவாவது சபைல கரெக்ட்டா சொல்லுங்க.. அந்த மூணு திறமையாளர் யாரு.?.” என்று கமல் கேட்க, ரச்சிதா மற்றும் அமுதவாணனின் பெயர்கள் மாறவில்லை. ஆனால் கதிரவன், தனலஷ்மி, ஷவின் போன்றவர்களின் பெயர்கள் புதிதாக முளைத்தன. ஷிவின் எல்லாம் விருது விழாவில் ‘Boring performer’ விருது வாங்கியவர். எப்படி இந்த மாற்றம் ஏற்பட்டது?

“அப்படின்னா திறமை பின்னுக்குத் தள்ளப்பட்டு நட்பும் சார்பும் முன்னால் வந்திருக்கு.. அதானே..? கலைஞர்களாகிய நீங்களே சக கலைஞர்களை அங்கீகரிக்காமல் போனால் அதை யார் செய்வார்கள்?, ஒரு கலைஞனா மாறுவதற்கு முதல் தகுதியே நல்ல ரசிகனா இருப்பதுதான். இல்லைன்னா அரைச்ச மாவுதான் கிடைக்கும். நல்ல நடிகன் யாருன்னு மக்களுக்குத் தெரியும். அவங்களுக்கு டிக்கெட் பணம் முக்கியமில்ல. நடிப்பு நல்லாயிருந்தா மீண்டும் டிக்கெட் வாங்கி வருவாங்க” என்று அறிவுறுத்தி விட்டு பிரேக்கில் சென்றார் கமல்.

ரச்சிதா

கமலின் தலை மறைந்ததும் அசிமிற்கும் ஏடிகேவிற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. ஏனாம்? ‘யார் அசலான திறமையாளர்?’ என்பதற்கு ஏடிகே சாட்சி சொன்ன போது ‘கதிரவனின் அர்ப்பணிப்பு எனக்கு ரொம்ப பிடிச்சது’ என்று சொல்லி விட்டார். தன்னுடைய முறை வந்த போது ஏடிகே சொன்னதில் இருந்த முரணை கடுமையான தொனியில் சுட்டிக் காட்டினார் அசிம். “என்ன சார் இது… அவார்டு பங்ஷன்ல கதிரவனை வெளுத்து வாங்கினாங்க. இப்ப என்னடான்னா தலைகீழா சொல்றாங்க.. அதுலயும் ஏடிகே எல்லாம் ‘கதிரவன் கத்திட்டே இருந்தது எரிச்சல் மூட்டியது.. ‘ன்னு சொன்ன மனுஷன். இப்ப என்னடான்னா.. பிளேட்டை திருப்பிப் போடறார்” என்று அழுத்தமான வாக்குமூலம் தந்தார் அசிம்.

இதற்கு விளக்கம் அளிப்பதற்காக ஏடிகே கையைத் தூக்கிய போது கமல் மறுத்து விட்டது சரியான அணுகுமுறை அல்ல. அசிம் பொதுவாகச் சொல்லியிருந்தால் கூட பிரச்சினை எழுந்திருக்காது. ஆனால் ஏடிகேவை மட்டும் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டுச் சொன்னதால் ஏடிகே கடுமையான வருத்தமும் கோபமும் கொண்டார். அசிம் செய்ததில் தவறிருக்கிறதா? நிச்சயம் இல்லை. அவர் தனது கருத்தை நோ்மையாகச் சொன்னதற்குப் பாராட்டத்தான் செய்ய வேண்டும் இதை மற்றவர்களும் ஸ்போர்டிவ்வாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் ஏடிகே அவ்வப்போது இவ்வாறு கோபித்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். நண்பராக இருந்து கொண்டே அசிம் துரோகம் செய்கிறார் என்று ஏடிகே கருதுகிறார்.

ஏடிகே

எனில் ஏடிகே சொன்னது தவறா? அதுவும் இல்லை. ஏனெனில் ஒருவர் தனது கருத்தை மாற்றிக் கொள்வதற்கு உரிமை இருக்கிறது. கடந்த வார பஞ்சாயத்தில் ஜனனி தொடர்பாக அசிமை குற்றம் சாட்டி ஷிவின் பேசும் போது ‘ஒருத்தருக்கு எப்ப வேணா கருத்து மாறலாம். அப்பா புத்தி சொல்ற போது கேட்காதவன், அதுவே ஃபிரெண்டு சொல்லும் போது அவனுக்கு உறைக்கலாம்” என்று கமல் அசிமிற்கு ஆதரவு தந்தார். அதே அளவுகோலை வைத்துப் பார்க்கும் போது கதிரவனின் நடிப்பு ஏடிகேவிற்கு தாமதமாக பிடித்ததில் பிழையில்லை. இது மட்டுமல்ல. “டாஸ்க்லாம் முடிஞ்சப்புறம் யோசிச்சுப் பார்த்தேன். கதிரவன் கத்தியதுதான் எரிச்சலா இருந்ததே தவிர. அவன் டாஸ்க்லயே தொடர்ந்து இருந்தது பாராட்ட வேண்டிய விஷயம்” என்று மிகத் தெளிவாகவே தன் சாட்சியத்தை சொல்லியிருந்தார் ஏடிகே. இதை அசிம் கவனத்திருக்க வேண்டும்.

ஷிவின்

“எனக்கு உன் கிட்ட பேசவே பிடிக்கலை. சர்காஸமா பேசி பேசியே முதுகில் குத்தறே” என்றெல்லாம் கோபம் கொண்ட ஏடிகேவை சமாதானப்படுத்த அசிம் எடுத்துக் கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. ஆனால் இரண்டே நாளில் இருவரும் நட்பாகி விடத்தான் போகிறார்கள். “பார்த்தியா. என் நண்பனை..” என்று சூர்யா மாதிரி ஏடிகேவும் பேசத்தான் போகிறார். நமக்குத்தான் பார்த்து பார்த்து பழகிப் போச்சு.

‘டபுள் எவிக்ஷனில் முதலில் வெளியேறிய தகுவரன்’

பிரேக் முடிந்து திரும்பிய கமல் எவிக்ஷன் கார்டை விசிறிக் கொண்டே வந்தார். ‘இன்னிக்கே எவிக்ஷனா?’ என்று மக்கள் வியந்தார்கள். “அசிம்.. ஏடிகே.. நான் கொடுத்தனுப்பிய சாப்பாட்டை விடவும் உங்க சண்டைல மசாலா அதிகமா இருந்தது. நாங்களும் வெளிய பார்த்துக்கிட்டேதான் இருக்கோம்” என்று நமட்டுச்சிரிப்புடன் கூறியபடியே எவிக்ஷன் சடங்கிற்கு நகர்ந்தார். இதில் அதிக சஸ்பென்ஸ் இல்லை. ‘ஆயிஷா வெளில போகலாம்’ என்று சிலர் யூகம் சொல்ல, ‘ராம்’ பெயர் கொண்ட கார்டை சரக்கென்று வெளியே உருவினார் கமல்.

ராம் அதிர்ச்சி எல்லாம் அடையவில்லை. இதை முன்பே எதிர்பார்த்திருந்ததால் புன்னகையுடன் எழுந்து கொண்டார். மற்றவர்களும் இதை இயல்பாக எடுத்துக் கொண்டாலும், ஆச்சரியகரமாக ஷிவின் மட்டுமே கட்டுப்படுத்த முடியாமல் அழுதார். ராமிடம் ஷவின் அதிக கனெக்ட்டுடன் இருந்தது போலவும் தெரியவில்லை. பிறகு எப்படி? “அழுவாத.. எனக்கு இந்த சென்டி சீன்லாம் பிடிக்காது. நான் தனியா வாழ்ந்த ஆளு.. இந்த வீடு புது அனுபவம் தந்தது. நான் யார் கூடயும் சண்டை போட்டதில்லை” என்று புன்னகையுடன் சொன்னபடி விடைபெற்றார் ராம்.

ராம் – கமல்

ராமை மேடைக்கு வரவேற்ற கமல் “இந்த வாரத்துல கொஞ்சம் துடிப்பா இருந்தீங்க.. ஆனா அதுக்குள்ள” என்று சொன்னது உண்மை. தகுவரன் பாத்திரத்தில் ராமின் நடிப்பு சிறப்பாக இருந்தது. அதுவே அவரைக் காப்பாற்றும் என்று கூட தோன்றியது. “எனக்கு சண்டை போட பிடிக்காது’ என்று சொன்ன ராமிற்கு பயண வீடியோவைக் காண்பித்து வழியனுப்பி வைத்தார் கமல். ராம் என்றாலே கிள்ளுக்கீரைதான். வெளியே நவீன ரக கார் எதுவும் காத்திருக்கவில்லை. ஆட்டோ பிடித்து போகட்டும் என்று விட்டு விட்டார்கள் போல.

அகம் டிவி வழியாக உள்ளே வந்த கமல் “ஷிவின்..உங்கள் கதறலைப் பார்த்தேன்.. ஓகே.. நாளை சந்திப்போம்’ என்று விடைபெற்றுக் கொண்டார். இன்னமும் ஒரு எவிக்ஷன் பாக்கியிருக்கிறது. அது ஆயிஷாவா? காத்திருந்து பார்ப்போம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.