புதுவையில் குடியிருப்புப் பகுதியில் 'டான்ஸ் பார்' திறக்க எதிர்ப்பு: பொதுமக்கள் மறியல்

புதுச்சேரி: குடியிருப்புப் பகுதியில் நடனத்துடன் கூடிய மதுபானக் கூடம் திறக்க எதிர்ப்பு பொதுமக்களுடன் அதிமுக, சிபிஐ உள்ளிட்ட கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில் பார் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது.

புதுவை நகரில் பல இடங்களில் ரெஸ்டோ பார் என்ற பெயரில் டிஸ்கோத்தே நடனத்துடன் கூடிய மதுபார் அமைக்க கலால்துறை அனுமதி வழங்கி வருகிறது. புதுவையில் ஏற்கனவே ஏராளமான மதுபார்கள் இருக்க புதிதாக ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி வழங்குவதற்கு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் புதுவை முத்தியால்பேட்டையில் ஏழை மாரியம்மன் கோயில் அருகே ரெஸ்டோ பாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஞாயிறு மாலை திறப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. கோயில், பஸ் நிறுத்தம், குடியிருப்பு, மார்கெட் உள்ளிட்ட மக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் மதுபார் அமைக்க அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக முத்தியால்பேட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.

அதன்படி, பார் அமைக்கப்படும் பகுதியில் இன்று ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் அதிமுக எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சேதுசெல்வம், ராமமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர் தேவசகாயம் மற்றும் அனைத்து கட்சியை சேர்ந்தவர்கள், பொதுமக்கள், பெண்கள் இதில் பங்கேற்றனர்.

பின்னர் அங்கிருந்து அவர்கள் ஊர்வலமாக கிழக்கு கடற்கரை சாலை முத்தியால்பேட்டை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலால் போக்குவரதது பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் மேறியலை போராட்டக்காரர்கள் கைவிடவில்லை.

இதனால் சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தது. இதனையடுத்து, போலீஸார் வாகனங்களை மாற்றுப் பாதையில் திருப்பி அனுப்பினார்கள்.ஒரு மணி நேரம் மறிய்ல் தொடர்ந்தது இதனையடுத்து தாசில்தார் குமரன் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்,வருமானம் என்ற பெயரில் குடியிருப்பு பகுதியில் நடன மதுபார் அமைக்க அனுமதி வழங்குவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

அதையடுத்து பார் திறப்பை தள்ளி வைப்பதுடன் கலால்துறை துணை ஆணையர் முன்பு நாளை பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டோர் கலைந்தனர்.

பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், “அதிகளவில் மதுபானக் கடைகள், பார்கள் உள்ள சூழலில் புதிதாக சுற்றுலா திட்டத்தின் கீழ் ரெஸ்டோ பார் மதுவிற்பனை அனுமதி தரப்பட்டுள்ளது. இந்த ரெஸ்டோ பார்களில் நடனம், மது உண்டு. குடியிருப்பு பகுதிகள், வழிபாட்டு தலங்கள், பள்ளி அருகே திறக்கப்படுகிறது.இதனால் பல பகுதிகளிலும் போராட்டம் நடக்கிறது” என்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்டோர் பொதுமக்கள் போராட்டத்துக்கு தொடர்ந்து ஆதரவு தருவோம் என்று தெரிவித்துள்ளனர்.

அதிமுக முன்னாள் எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் கூறுகையில், “முத்தியால்பேட்டையில் ஏழை மாரியம்மன் கோவில் அருகே ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசிக்கும் குடியிருப்பு மத்தியில் கலாச்சார சீரழிவு நடனத்துடன் கூடிய மதுபான கடை நடத்த கலால்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி அனுமதி வழங்கியுள்ளார். கோவில், குடியிருப்புகள் மத்தியில் இந்த மதுபார் திறக்கப்பட்டால் நாள்தோறும் சட்ட ஒழுங்கு சீர்கேடு, கலாச்சார சீரழிவு ஏற்படும்.

இங்கு மதுபார் அமைக்கக்கூடாது என கலால்துறையிடம் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக இந்த மதுபார் திறப்பு விழா தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதற்கு வழங்கப்பட்ட அனுமதியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் மக்களை திரட்டி அதிமுக சார்பில் மீண்டும் போராட்டம் நடத்தப்படும்.” என்று குறிப்பிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.