மதுரை காமராசர் பல்கலைக்கழக கல்லூரி முதல்வா் நியமனத்தில் விதிமுறைகள் மீறப்பட்டிருப்பதாக, அக்கல்லூரி பேராசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகம் சார்பில் மதுரை அழகர்கோவில் சாலையில் உறுப்புக் கல்லூரி செயல்படுகிறது. இக்கல்லூரி முதல்வராக இருந்த ஜார்ஜ், அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு பல்கலைக்கழக உதவிப் பேராசிரியா் புவனேஸ்வரன் சமீபத்தில் முதல்வராக நியமிக்கப்பட்டார். இதற்கிடையே கல்லூரி முதல்வர் நியமனத்தில் யுஜிசி விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக அக்கல்லூரி பேராசிரியா்கள் உயர்கல்வித் துறைக்கு புகாா் அனுப்பி உள்ளனர். அதில், மதுரை காமராசர் பல்கலைக்கழகக் கல்லூரி முதல்வர் பொறுப்பிலிருந்து ஜாா்ஜ் விடுவிக்கப்பட்டாா். அதே கல்லூரியில், அவரை விட பணி அனுபவமுள்ள 4 பேராசிரியா்கள் உள்ளனா்.
யுஜிசி விதிமுறைப்படி கல்லூரி முதல்வர் பதவியில் உள்ளவர் விடுவிக்கப்படும்போது, அவருக்கு அடுத்த நிலையிலுள்ள மூத்த பேராசிரியா்களையே முதல்வராக நியமிக்க வேண்டும் என விதிமுறை உள்ளது. ஆனால், அதற்கு மாறாக பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராக உள்ள புவனேஸ்வரனை கல்லூரி முதல்வராக நியமித்துள்ளனர்.
எனவே முதல்வா் நியமனத்தை ரத்து செய்து, கல்லூரியில் உள்ள மூத்த பேராசிரியர்களில் ஒருவரை முதல்வராக நியமிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.