மறைமலைநகர் அருகே கொப்பளான் ஏரி மதகு உடைந்து: விளை நிலத்தில் மழைநீர் புகுந்தது: விவசாயிகள் கவலை

செங்கல்பட்டு: மாண்டஸ் புயல் மழை காரணமாக அனுமந்தபுரம் கொப்பளான் ஏரி மதகு உடைந்து, விளைநிலத்துக்குள் தண்ணீர் புகுந்ததால் பயிர்கள் சேதமாகின. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மாண்டஸ் புயல் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் சூறைகாற்றுடன் பல இடங்களில் பரபலாக மழை பெய்தது.

இதனால், மறைமலைநகர் அடுத்த அனுமந்தபுரம் கிராமத்தில் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட கொப்பளான் ஏரி நிரம்பி மதகு உடைந்தது. ஏரியில் இருந்து வெளியேறிய தண்ணீர், அதே பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்தது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வருவாய்துறை அதிகாரிகள் ஏரியின் உடைப்பை ஆய்வு செய்து சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏரி மதகு உடைந்து விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது:
கடந்த மாதம் பெய்த வடகிழக்கு பருவ மழையின்போது கொப்பளான் ஏரி முழுகொள்ளளவை எட்டியிருந்தது. தற்போது மாண்டஸ் புயல் மழையால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தன் காரணமாக மதகு உடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால், ஏரியை சுற்றிய கிராமங்களில் உள்ள 97 ஏக்கர் விவசாய நிலத்தில் தண்ணீர் நீர் புகுந்துள்ளது. ஏரி உடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம் என்றனர். ஏரி உடைப்பை பார்க்கவரும் அப்பகுதி மக்களை தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் மறைமலைநகர் அருகே பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.