நேற்று அதிகாலை மாமல்லபுரம் அருகே மாண்டஸ் புயல் கரையைக் கடந்ததையடுத்து முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மாநகராட்சி மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் ஆகியோர், புயல் பாதித்த இடங்களுக்கு குழுவாக நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினர்.
அப்போது காசிமேடு பகுதியில் ஆய்வு முடித்துவிட்டு அவர்கள் திரும்புகையில், முதல்வர் ஸ்டாலினின் கான்வாய் காரில் மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் ஆகியோர் தொங்கியபடி பயணித்தனர். அது தொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகின.
இந்த நிலையில், இது குறித்து பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தன் ட்விட்டர் பக்கத்தில், முதல்வர் ஸ்டாலினின் கான்வாயில் மேயர் பிரியா தொங்கிச்செல்லும் படத்தை பதிவிட்டு, “சுயமரியாதை இயக்கம், சமூகநீதி இயக்கம், சாமானியர்களின் கட்சி என்ற இந்த போலிக் கதைகள் அனைத்தும் இறந்து புதைந்து வெகுநாள்களாகிவிட்டன. நேற்று தி.மு.க-வால் அது மீண்டும் வெளிப்பட்டுவிட்டது” என தி.மு.க-வை விமர்சித்திருக்கிறார்.