போபால்: ம.பி.யின் பெதுல் மாவட்டம், மாண்டவி என்ற கிராமத்தில் 3-ம் வகுப்பு படித்து வரும் 8 வயது சிறுவன் டான்மே. இச்சிறுவன் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை தனது வீட்டுக்கு அருகில் உள்ள வயலில் மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான்.
இதையடுத்து அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் மீட்புப் பணி தொடங்கியது. மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், ஊர்க் காவல் படையினர் மற்றும் உள்ளூர் போலீஸார் இப்பணியில் ஈடுபட்டனர். 400 அடி ஆழ கிணற்றில் 55-வது அடியில் சிக்கியுள்ள சிறுவனை மீட்க மீட்புக் குழுவினர் 5 நாட்களுக்கும் மேலாக போராடினர்.
இதற்கிடையில் சிறுவனின் தாயார் ஜோதி சாகு நேற்று, “ஒரு தலைவர் அல்லது அதிகாரியின் குழந்தை தவறி விழுந்திருந்தால் இவ்வளவு நேரம் எடுத்துக் கொள்வார்களா? எனது மகனை வெளியே எடுங்கள். அவன் முகத்தை ஒருமுறை பார்க்க விரும்புகிறேன். எது வேண்டுமானாலும் இருக்கட்டும் அவனை வெளியே எடுத்துவிடுங்கள்” என்று கண்ணீருடன் கூறினார்.
பெதுல் மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஷ்யாமேந்திர ஜெய்ஸ்வால் கூறும்போது, “ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் 45 அடி வரை நாங்கள் தோண்டிவிட்டோம். தொடர்ந்து நடந்த மீட்புப் பணிக்குப் பிறகு சிறுவனை மீட்டு வெளியில் கொண்டு வந்தோம். ஆனால், சிறுவன் உயிரிழந்து விட்டான். இதுதொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றார்.