புதுச்சேரி பகுதியை சேர்ந்த பரிமேல் செல்வன் என்பவருக்கு புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, சந்திரன் என்பவர், என்.ஆர் காங்கிரஸ் பிரமுகர் மதகடிப்பட்டு வெங்கடேசன் (70) என்பவரை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
பல்கலைக்கழகத்தில் நான்கு பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், அனைத்து பணியிடங்களையும் ஒரே நேரத்தில் நிரப்ப வேண்டும் என்றும் வெங்கடேசன் பரிமேல் செல்வனிடம் தெரிவித்ததாக தெரிகிறது.
இதனையடுத்து பரிமேல் செல்வன், தனது உறவினர்கள், நண்பர்கள் என நான்கு பேரை சேர்த்துகொண்டு ரூ. 47 லட்சம் பணத்தை பல்வேறு தவணைகளாக வெங்கடேசனுக்கு கொடுத்துள்ளார்.
பின்னர் வேலை குறித்து கேட்டபோதெல்லாம், வெங்கடேசன் பல காரணங்கள் சொல்லி காலம் தாழ்த்தி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பரிமேல் செல்வன் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, இது தொடர்பாக பெரியகடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில், பெரியகடை போலீஸார் வெங்கடேசனின் மனைவி சாந்தி, மகன் மற்றும் உறவினர்கள் மீது வழக்கு பதிவு செய்து வெங்கடேசன், சந்திரன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தலைமறைவாக உள்ள அவரது உறவினர்களை போலீசார் தேடி வருகின்றனர். வெங்கடேசன் மீது புதுச்சேரி தமிழகம் மற்றும் கேரளாவில் ஏற்கனவே பல மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
newstm.in