”வீட்டை காலி பண்ணச் சொல்லிட்டாங்க; 4,000 கிளிகள் எங்க போகும்?” – பதறும் ‘பறவை மனிதர்’ சேகர்

சட்டமா? சென்டிமெண்டா? என  நீதித்துறை வட்டாரத்தில் உள்ளவர்களை யோசிக்க வைத்திருக்கிறது இப்படியொரு வழக்கு.

சென்னை ராயப்பேட்டையில் வாடகை வீட்டில் வசித்துவருகிறவர் ’பேர்ட் மேன்’ என அழைக்கப்படும் சேகர். 22 வருடங்களுக்கும் மேலாக பறவைகளுக்கு உணவு அளிக்கும் பறவைகள் நேய செயலைச் செய்துவருகிறார். கிட்டத்தட்ட, ஒரு நாளைக்கு மட்டுமே 4,000 கிளிகள் இவரது வீட்டிற்கு வந்து உணவு சாப்பிட்டு இளைப்பாறி செல்கின்றன. ஆனால்,  வீட்டின் உரிமையாளர்  இந்த வீட்டை விற்பனை செய்யப்போவதாகவும் அதனால், இந்த வீட்டை காலிசெய்யவேண்டும் என்று வழக்கு தொடுத்துள்ளார்.

கிளிகள்

இந்த வீட்டைக் காலி செய்துவிட்டால் தினந்தோறும் வந்து சாப்பிட்டு இளைப்பாறி செல்லும் 4,000 கிளிகள் எங்கே போகும்? ’எனக்கான பேரிழப்பு அல்ல. இயற்கைக்கான பேரிழப்பு’ என கண்கலங்கி நிற்கிறார் ’பேர்ட் மேன்’ சேகர். நீதிமன்றம் வரும் 13 ஆம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. இதனால், பறவைகள் ஆர்வலர்கள் மட்டுமல்ல இந்த வழக்கை அறிந்த பொதுமக்களும் நீதித்துறையை சார்ந்தவர்களும் தீர்பை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், பறவைகளின் ’காட் ஃபாதராக’ செயல்பட்டுக்கொண்டிருக்கும் சேகரிடம் நாம் பேசியபோது,

“22 வருஷங்களுக்குமேல இந்த கிளிகளுக்கு உணவளிச்சுக்கிட்டிருக்கேன். தினந்தோறும் 4,000 கிளிகள்மேல வந்து சாப்ட்டு போறாங்க (கிளிகளை அவங்க என்று மரியாதையுடன் தான் குறிப்பிடுகிறார்) அவங்க வந்துட்டு போகும்போது நான், பெரும்பாலும் பக்கத்துல இருக்கமாட்டேன். யாராது கல்லால அடிச்சி விரட்டிடுவாங்கன்னு வெளியில நின்னு கண்காணிச்சுக்கிட்டு இருப்பேன். பறவைகள் தங்களுக்கு பாதுக்காப்பான இடம்னு தெரிஞ்சாதான் நம்பிக்கையோட வருவாங்க. 1990 ல் இந்த வீட்டிற்கு வந்தேன். பறவைகளுக்கு சாதாரணமா வீட்டு  சுவற்றில் உணவு வைக்க ஆரம்பிச்சேன். முதலில் சில பறவைகள், 4 கிளிகள்தான் வந்தாங்க. நாளடைவில்  கிளிகள் அதிகமா வர ஆரம்பிச்சாங்க. இப்போ, ஒருநாளைக்கு 4,000 கிளிகள் வந்து சாப்பிட்டு இளைப்பாறிட்டு போறாங்க.

பறவை மனிதன் சேகர்

அதுவும், காலை 6 டு 7 மணி, மாலை 4 டு 6 மணி என இரண்டுவேளை வந்துட்டு போறாங்க. நானும் என் மனைவியும் தினமும் அரிசியை ஊறவைச்சு கிளிகளுக்கு வைப்போம். விரும்பி சாப்பிட்டு போவாங்க. சென்னை முழுக்க இருந்த மரங்களை எல்லாம் வெட்டிட்டாங்க. உணவுக்கும் தங்குறதுக்கும் இந்த கிளிகள் எங்க போவாங்க? ரொம்ப தொலைவிலிருந்து எல்லாம் வந்து சாப்பிட்டு போறாங்க. தானா வர்ற கிளிகள் மட்டுமில்ல. வளர்க்கமுடியாத கிளிகள், கண்ணு தெரியாம, கைகள் அடிபட்டு மாற்றுத்திறன் கொண்ட கிளிகளையும் கொண்டுவந்து நம்ப வீட்டுல விட்டுட்டு போவாங்க. அவங்களையும் அரவணைச்சு வளர்க்கிறோம்.

இந்த சூழ்நிலையில, 2010 ஆம் ஆண்டு திடீர்ன்னு சொல்லாம கொள்ளாம வீட்டை காலி பண்ணச் சொல்லி ஹவுஸ் ஓனர் வழக்கு தொடுத்தாங்க. அந்த வழக்கு நிலுவையிலேயே இருந்தது. 2022 ஜூன் மாசத்திலிருந்து மீண்டும் அது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்துடுச்சு. முப்பது வருடத்துக்கு முன்னால 1,600 ரூபாய் வாடகைக்கு வந்தேன். இப்போ, 2,400 ரூபாய் வாடகை கொடுக்கிறேன். இந்த சூழ்நிலையில, நாங்க  வீட்டை காலி பண்ணிட்டா, இந்த வீட்டை நம்பி சாப்பிடவும் இளைப்பாறவும்  வந்துக்கிட்டிருந்த பறவைகள், கிளிகள் எங்க போவாங்க. எப்படியா இருந்தாலும் இந்த வீட்டை விற்கத்தான் போறாங்க. நியாயமான விலையில எங்கக்கிட்டேயே விற்றுடுங்க. எங்க ஊர்ல இருக்கிற பூர்வீக நிலங்களை விற்றும் என்னோட பழமையான கேமராக்களை விற்றும் வர்ற பணத்தை கொடுத்து வீட்டை வாங்கிக்கிறோம்னும் கேட்டு பார்த்துட்டோம். ஆனா, எங்களுக்கு விற்கமாட்டேங்குறாங்க” என்றவரிடம்,  

பறவை மனிதர் சேகர்

”30 வருடங்கக்கு முன்பு வரும்போது 1,600 ரூபாய் வாடகைக்கு வந்திருக்கீங்க. அதுவும், சென்னை ராயப்பேட்டையில இத்தனை வருடங்கள் ஆகியும் 2,400 ரூபாய்தான் வாடகை கொடுத்துக்கிட்டிருக்கீங்க. ஹவுஸ் ஓனர் இந்த வீட்டை விற்கணும்னும் காலி பண்ண சொல்றதும் நியாயமானதுதானே? நீதிமன்றமும் சட்டப்படிதானே நடவடிக்கை எடுக்கும்?” எனக் கேட்டோம்.

”இந்த வீட்டை அபகரிக்கணும்ங்குற எண்ணமெல்லாம் கிடையாது.  ஐந்துமுறை மோட்டர் ரிப்பேர் செய்திருக்கேன். வீட்டுக்கான வரிகள் மட்டுமே 5 லட்ச ரூபாய் கட்டியிருக்கேன். மெயிண்டெனன்ஸ் நான் தான் பார்த்துக்கிறேன். நான், சுயநலமான ஆள் இல்லை.  ஒருநாளைக்கு இந்த கிளிகளுக்கு 75 கிலோ அரிசி வைக்கிறேன். கிட்டத்தட்ட, 2000 ரூபாய்க்குமேல செலவாகுது. நான், யாரிடம் போயி டொனேஷன்னு கேட்கிறதில்லை. விருப்பப்பட்டா அரிசி வாங்கிக்கொடுக்கிறாங்க.  எனக்கு இப்போ வயசு 66 ஆகிடுச்சு. முன்னமாதிரி எனக்கு அதிக வருமானம்கூட வர்றதில்ல. கேமரா மெக்கானிக் வேலையில  கிடைக்குற கொஞ்ச வருமானத்துலதான் இவ்வளவு கிளிகளையும் பார்த்துக்கிறேன். பல்லாயிரக்கணக்கான கிளிகள் வர்றாங்க.

கிளிகள்

கூகுளில் டைப் செய்தாலே உடனே காண்பிக்கிற அளவுக்கு உலகம் முழுக்க இந்த இடம் ஃபேமஸ் ஆகிடுச்சு. சென்னை சில்க்ஸ் உள்ளிட்ட பலர் இந்த இடத்தை வாங்கிக்கிட்டு, என்னை கிளிகளை வழக்கம்போல பராமரிக்க சொல்றாங்க. அதுக்கும் எங்க ஹவுஸ் ஓனர் ஒத்து வரலைன்னா, அரசாங்கமே இந்த இடத்தை நியாயமான விலை கொடுத்து வாங்கி கிளிகளின் சரணாலயமா பயன்படுத்தலாம். ஒரு வேலைக்காரனா  நானே இருந்து பார்த்துக்கிறேன்னுதான் கோரிக்கை வைக்கிறேன்.  

கடந்த மாதம் வீட்டை காலி செய்யணும்னு நீதிமன்றம் உத்தரவிட்டது. நாங்களும் சட்டரீதியாக மேல்முறையீடு செய்துள்ளோம். வர்ற 13 ஆம் தேதிக்கு ஒத்தி வச்சிட்டாங்க. எப்படி வரப்போகுதுன்னு தெரியல. ஆனா, இந்த கிளிகளை காப்பாத்தனும். அது மட்டும்தான் என்னோட கோரிக்கை” என்கிறார் உருக்கமாக.

எம்.ஜி.ஆர் நடித்த ’பெற்றால்தான் பிள்ளையா?’ படம் போல, சட்டப்படி வீடு  அந்த வீட்டின் உரிமையாளருக்கு சொந்தம் என்றாலும் உணர்வுப்படி அவரை வீட்டைவிட்டு காலிசெய்துவிட்டால் அந்த 4,000 கிளிகள் எங்கே போகும் என்ற கேள்விகள் எழத்தான் செய்கின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.