12 நாட்களில் நான்காவது தற்கொலை: ஆளுநர் எப்போதுதான் ஒப்புதல் அளிப்பார்? – அன்புமணி

தமிழக அரசு கொண்டு வந்த ஆன்லைன் சூதாட்டம் தடை அவசர சட்டத்துக்கு கையெழுத்திடாமல் அதனை காலாவதியாகியுள்ள பழிக்கு ஆர்.என்.ரவி ஆளாகியுள்ளார். கடன் வாங்கிய பணத்தையும், கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தையும் சூதாட்டத்தில் வைத்து தோற்பவர்கள் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்வதை தடுக்க தமிழக அரசு அவசர சட்டத்தை கொண்டு வந்தது. அந்த சட்டத்தை ஆராய்ந்து உரிய நேரத்தில் ஆளுநர் கையெழுத்திடாமல் காலாவதியாகிவிட்டதாக விமர்சிக்கப்படுகிறது.

தடை சட்டம் வருவதற்கு முன்பு ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டத்தால் தமிழகத்தில் குடும்ப பெண் உட்பட 82 பேர் தற்கொலை செய்திருந்தனர். இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது அவசரத் தேவை என்று அன்புமணி ராமதாஸ் ஆளுநருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பதிவில், கூறியுள்ளதாவது; சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த உத்தண்டி வளவு கிராமத்தைச் சேர்ந்த மணிமுத்து என்ற ஓட்டுநர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆன்லைன் சூதாட்டத் தடை நீக்கப்பட்ட பிறகு, சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் நிகழும் 36-ஆவது தற்கொலை இதுவாகும். ஆன்லைன் சூதாட்டத்தடை அவசர சட்டம் காலாவதியானதற்கு பிந்தைய 12 நாட்களில் நிகழ்ந்த நான்காவது தற்கொலை இதுவாகும்.

ஆன்லைன் சூதாட்டம் எவ்வளவு கொடியது என்பதற்கு அண்மைக் காலங்களில் அதிகரித்து வரும் தற்கொலைகளே சாட்சி. ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படவில்லை என்றால், அதில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்வது அன்றாட நிகழ்வுகளாக மாறுவதை தவிர்க்க முடியாது. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது அவசரத் தேவை. ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழகத்தில் நிகழும் தற்கொலைகளை ஆளுநர் கண்டுகொள்ளாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. சூதாட்டத் தடை சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.