சென்னை: சென்னையில் 200 வார்டுகளிலும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
‘மேன்டூஸ்’ புயலால் சைதாப்பேட்டை தொகுதியில் வீடு இடிந்தும் மரம் விழுந்தும் பாதிக்கப்பட்ட பகுதிகளான ஜோன் சாலை,நெருப்புமேடு, ஜீனிஸ் சாலை, காரணீஸ்வரர் கோயில் பகுதி ஆகிய இடங்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பார்வையிட்டு ஆய்வுசெய்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினார்.
அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ‘மேன்டூஸ்’ புயலால் தமிழகம் முழுவதும் 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை, காற்றின் வேகம் அதிகரித்து பெருமளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்கிற எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், பாதிப்பு பெருமளவு கட்டுக்குள் இருக்கிறது. பல்வேறு தெருக்களில் விழுந்துள்ள மரங்களை அகற்றும் பணிகள் வேகமாக நடைபெறுகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, 200 வார்டுகளிலும் மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. சென்னை மாநகராட்சியில் 130 ஜெனரேட்டர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 911 மோட்டார் பம்புகள் வாடகைக்கு பெறப்பட்டு, ஏற்கெனவே வட்டத்துக்கு ஒரு மோட்டார் பம்பு இருக்கிற நிலையில் கூடுதலாகவும் மோட்டார் பம்புகள் பயன்பாட்டில் உள்ளன. 261 மரம் அறுப்பு இயந்திரங்கள், 67டொலஸ்கோப் மரம் அறுப்பு இயந்திரங்கள், 6 ஹைட்ராலிக் மரம் அறுப்பு இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. சென்னையில் உள்ள 16 சுரங்கப் பாதைகளிலும் மழைநீர் தேக்கம் இல்லாமல்போக்குவரத்து சீராக உள்ளது. 169 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன.
சிந்தாதிரிப்பேட்டையில் ஒரு மணி நேரத்துக்கு 1,500 பேருக்கு உணவு சமைக்கும் வகையில் நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன. சைதாப்பேட்டை, மேற்குமேடு குடிசைப் பகுதியில் வீடு இடிந்து, பக்கத்து குடிசை மீது விழுந்ததில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். அதில் தாய்க்கும், குழந்தைக்கும் தலையில் பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது. அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.