BANvIND: இஷானிடம் 28 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற வங்கதேசம்; இயல்பு நிலைக்குத் திரும்பும் இந்தியா!

திரில்லர் போட்டிகளுக்கெல்லாம் விடுமுறை விட்டுவிட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு நாள் போட்டிகளில் இந்தியா எப்படி விளையாடுமோ அப்படி ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது.

வங்கதேசம், தென்னாபிரிக்கா, நியூசிலாந்து என்று வரிசையாக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இறங்கு முகத்தில் இருந்த இந்திய அணி அதிகாரப்பூர்வமாக தற்போது தன்னுடைய ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டத் தொடங்கியுள்ளது. கடைசி வரை போய் போராடி ஜெயிப்பது, கடைசி பந்து போடும் வரை யார் வெற்றி பெறுவார் என்றே தெரியாமல் இருப்பது போன்ற B.P-ஐ எகிற வைக்கும் வேலைகள் எல்லாம் இல்லாமல் மிகவும் எளிமையாக இந்த மூன்றாவது ஒருநாள் போட்டியை வென்றுள்ளது இந்தியா.

ஒரு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் மிகவும் எளிமையாக வெற்றி பெறும். டாப் 3 இடத்தில் வரும் வீரர்களில் ஒவ்வொரு போட்டிக்கும் நிச்சயம் இருவராவது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவர். ஆனால் இந்த இரண்டு ஆண்டுகளாக இது நடக்காமல் போனதால் தான் ஒரு நாள் போட்டிகளில் இத்தனை சரிவை இந்தியா சந்தித்தது. அதை மாற்றியே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் இந்தியா இன்று களம் இறங்கியது போல. இரண்டு ஆட்டங்களுக்கு பிறகு வங்கதேச மைதானத்தை புரிந்து கொண்டு தீபக் சஹருக்கு பதிலாக ஸ்பின்னர் குல்தீப்புக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. கடந்த போட்டியில் காயத்தால் பாதிக்கப்பட்ட ரோஹித்துக்கு பதிலாக இஷான் கிஷான் இடம் பெற்றார்.

Ishan

வங்கதேச அணியைப் பொறுத்தவரை வேகப்பந்துவீச்சாளர் டஸ்கின் அகமதும், பேட்டிங் வீரர் யாசிர் அலியும் அணிக்குள் வந்திருந்தனர். டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இந்தப் போட்டியில் வங்கதேசம் வென்றது டாஸ் மட்டும் தான். ஒரு ஆறுதலுக்காக இந்தியாவின் துவக்க வீரர் தவானை வேகமாக வெளியேற்றினர். அதன் பிறகு இணைந்த கிசான் மற்றும் கோலி இணை வங்கதேச பந்துவீச்சை மிக மிக எளிதாக சமாளித்தது.

எந்த ஒரு பந்துவீச்சாளருமே இவர்களுக்குத் தொல்லை தரும் விதமாக பந்து வீசவில்லை. அதிலும் குறிப்பாக அரை சதம் அடிக்கும் வரை அமைதி காத்த இஷான் அதன் பின்பு தனது அத்தனை அதிரடி ஷாட்டுகளையும் முயன்று பார்க்க ஆரம்பித்தார்.

49 பந்துகளில் 50 அடித்தவர் அடுத்த 36 பந்துகளில் சதம் கடந்து விட்டார். சதம் கடந்ததைத் தொடர்ந்து அடுத்த கியருக்கு மாறுவதற்கான லைசன்ஸ் ஆக எடுத்துக்கொண்டு இதுவரை இந்தத் தொடரில் நாம் காணாத ஒரு அதிரடியை காண்பித்தார் இஷான்.

Ishan Kishan

நூறிலிருந்து 150 செல்ல வெறும் 18 பந்துகளே அவருக்கு தேவைப்பட்டது. வேகப் பந்துவீச்சாளர் சுழற் பந்துவீச்சாளர் என்று எந்த ஒரு பாகுபாடும் இல்லாமல் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் அனைத்து பந்துவீச்சாளரையும் சிதறடித்தார் இஷான்.

Double Hundred

126 பந்துகளில் தனது இரட்டை சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் சச்சின், சேவாக், ரோஹித் ஆகியோருக்கு பிறகு இரட்டை சதம் அடித்த நான்காவது இந்தியர் என்ற சாதனையை படைத்தார். மேலும் குறைவான பந்துகளில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையும் படைத்தார் இஷான்.

ஒருவழியாக 210 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். ஆரம்பம் முதலே இதையெல்லாம் அமைதியாக நின்று பார்த்துக் கொண்டிருந்த விராட் கோலி அதன் பிறகு தனது அதிரடியைக் காட்ட ஆரம்பித்தார். கிஷானை போன்ற வானுயர சிக்சர்கள் வரவில்லை என்றாலும் கண் கவர் பௌண்டரிகள் வந்த வண்ணமாகவே இருந்தன. கடந்த சில மாதங்களாகவே ஒரு நாள் போட்டிகளில் மிக மோசமான ஆட்டங்களை வெளிப்படுத்தி வந்த விராட் இன்றைக்கு உண்மையாகவே நாயகன் மீண்டும் வர்றார் என்று வாட்சப் ஸ்டேட்டஸ் வைக்கும் அளவுக்கு அதி அற்புதமாக விளையாடினார்.

ஆட்டத்தின் 39 வது ஓவரில் தன்னுடைய 85 வது பந்தில் சிக்ஸர் அடித்து சதம் கடந்த விராட் கோலி. கடந்த மூன்று வருடங்களாக ஒரு நாள் போட்டிகளில் வராமல் அடம்பிடித்துக் கொண்டிருந்த சதம் ஒரு வழியாக இன்று வந்துவிட்டது. 113 ரன்களுடன் கோலி வெளியேறினார்.

கடைசி கட்டத்தில் சுந்தர் மற்றும் அக்சர் இணைந்து சில தேவையான ரன்களை அடிக்க இந்திய அணி 409 ரன்கள் எடுத்தது. மிக மிகப் பெரிய இலக்கைத் துரத்திய வங்கதேச அணிக்கு ஆரம்பம் முதல் கடைசி வரை எந்த ஒரு பார்ட்னர்ஷிப்புமே அமையவில்லை. இவர்கள் வருவதும் போவதுமாக இருந்தனரே தவிர தேவையான ரன் ரேட்டையும் எட்டவில்லை விக்கெட்டுகளையும் காக்கவில்லை. அதிகபட்சமாக அந்த அணியின் சீனியர் வீரர் ஷகீப் 43 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பாக சர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மற்ற வீரர்களில் அக்சர் மற்றும் உம்ரான் தலா இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தினர். குல்தீப், சிராஜ், சுந்தர் ஆகியோரும் ஆளுக்கு ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

வங்கதேசம் கடைசியில் 182 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இது கிஷன் அடித்ததை விட 28 ரன்கள் குறைவு. கில், ருத்ராஜ் போன்ற வீரர்கள் ஏற்கெனவே இந்திய அணியின் ஓப்பனிங் கதவை தட்டிக் கொண்டிருக்கையில் நானும் இருக்கிறேன் என்பதை நினைவுபடுத்தி உள்ளார் கிஷன். மேலும் சீனியர் தொடக்க வீரர் தவானின் ஆட்டம் ஒவ்வொரு போட்டிக்கும் மோசமாகிக்கொண்டே செல்வதால், தவானும் தன்னை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்திற்குச் சென்றுள்ளார்.

Virat

எல்லாவற்றையும் விட விராட் கோலி சதம் அடித்தது இந்திய கிரிக்கெட் பழைய இயல்பான நிலைக்குத் திரும்புகிறது என்பதை நமக்கு எடுத்துக் கூறியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.