அமெரிக்க பத்திரிகையாளருக்கு அஞ்சலி செலுத்திய FIFA :
நேற்று முன்தினம், அர்ஜென்டினா vs நெதர்லாந்து இடையேயான காலிறுதிப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அமெரிக்க பத்திரிகையாளரான கிராண்ட் வால், திடீரென உயிரிழந்தார். இவரது மறைவிற்கு ஃபிஃபா, நேற்று பிரான்ஸ் vs இங்கிலாந்து இடையேயான காலிறுதிப் போட்டியில் அஞ்சலி செலுத்தியது. முன்னதாக 49 வயதான இவர், உலகக் கோப்பை குரூப் சுற்று ஆட்டத்தை பதிவு செய்வதற்காக LGBTQ – வை ஆதரிக்கும் வகையில் வானவில் நிற டி-ஷர்ட் அணிந்து கொண்டு அகமத் பின் அலி மைதானத்திற்கு சென்றார். ஆனால் அங்குள்ள காவலர்கள் இவரை மைதானத்திற்குள் அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உலகக்கோப்பையும் மொராக்கோ அணியும்:
நேற்று நடந்த காலிறுதிப் போட்டியில் போர்ச்சுக்கல் அணியை மொரோக்கோ அணி வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் ‘உலகக்கோப்பை அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்ற முதல் ஆப்பிரிக்கா அணி’ என்ற பெருமையை மொரோக்கோ பெற்றது. 1986 ஆண்டில் ‘நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் ஆப்பிரிக்கா அணி’ என்ற பெருமையையும் மொராக்கோ பெற்றது, குறிப்பிடத்தக்கதாகும்.
மொராக்கோவின் தடுப்பு அரண்:
மொராக்கோ அணி இந்த உலகக்கோப்பையில் இதுவரை 5 கோல்களை அடித்திருக்கிறது. அதேநேரத்தில் இந்த உலகக்கோப்பையில் வெறும் ஒரு கோலை மட்டுமே எதிரணிக்கு வழங்கியிருக்கிறது. அதுவும் ஒரு Own Goal என்பதும் குறிப்பிடத்தக்கது.
சாதனையாளரான ஹாரி கேன்:
நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை காலிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியும் பிரான்ஸ் அணியும் மோதின. இங்கிலாந்து அணியின் கேப்டனான ஹாரி கேன், ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் கோல் அடித்தார். இதன் மூலம் இங்கிலாந்து அணிக்காக அதிக கோல்களை அடித்த வெய்ன் ரூனியிம் சாதனையை சமன் செய்துள்ளார். ஹாரி கேன், சர்வதேச போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக 80 போட்டிகளில் விளையாடி 53 கோல்கள் அடித்துள்ளார். ஆனால், ஆட்டத்தின் 83 வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் அவர் கோல் அடிக்கவில்லை. இதன் மூலம் 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியிடம் இங்கிலாந்து வெற்றியை பறிகொடுத்தது.
விடைபெறும் ரொனால்டோ:
உலகக் கோப்பை காலிறுதி போட்டியில் போர்ச்சுகல் vs மொரோக்கோ மோதின. ஆட்டத்தின் தொடக்கத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ களமிறங்கவில்லை. இரண்டாவது பாதியில் 51வது நிமிடத்தில் ரொனால்டோ களமிறங்கினார். இது ரொனால்டோ விளையாடும் 196 வது சர்வதேச போட்டியாகும். இதன் மூலம் சர்வதேச போட்டியில் அதிகம் விளையாடிய குவைத் வீரர் பேடர் அல்-முதாவாவின் சாதனையை சமன் செய்தார்.
இந்த ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணி தோல்வியடைந்தது. இதுவே ரொனால்டோவின் கடைசி உலகக்கோப்பை போட்டி ஆகும். இதனால் மைதானத்திலிருந்து கண்ணீர் விட்டு அழுத படி வெளியேறினார், ரொனால்டோ.