இந்தியா முழுவதும் ஆதரவற்ற மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் விமானத்தில் பறக்கும் ஆசையை ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பு ஃபிளைட் ஆஃப் ஃபாண்டஸி எனும் திட்டம் மூலம் நிறைவேற்றி வருகின்றனர்.
அந்த வகையில் மெட்ராஸ் ஆங்கரேஜ் ரவுண்ட் டேபிள் 100 அமைப்பு 10 பார்வை மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களை விமானம் மூலம் டெல்லி அழைத்து சென்றனர். அங்கு நாடாளுமன்ற வளாகம் மற்றும் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து செல்ல உள்ளனர்.
பின்னர் மீண்டும் அவர்கள் விமானம் மூலம் சென்னை அழைத்துவரப்பட உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இந்தியாவின் முதல் பார்வை மாற்றுத்திறனாளி இசையமைப்பாளரான காட்சன் ருடால்ஃப் கலந்து கொண்டார்.
மாற்றுத்திறன் மாணவர்களை விமானம் மூலம் டெல்லி அழைத்து செல்லும் மெட்ராஸ் அங்கரேஜ் ரவுண்ட் டேபிளின் முயற்சியை பாராட்டிய காட்சன் ருடால்ஃப், நினைத்தால் முடியாதது எதுவும் இல்லை என்றும், நம் எண்ணங்கள் உயர்வானதாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
விமானத்தில் செல்லும் ஆசையை நிறைவேற்ற உதவியாக இருந்த ரவுண்ட் டேபிள் இந்தியாவின் விஜய் ராகவேந்திரா, சந்தோஷ் ராஜ், அம்புஜ் கெஜ்ரிவால் ஆகியோருக்கு மாற்றுத்திறனாளி மாணவர்கள் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.