ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளை ஆளுநர் கண்டுகொள்ளாதது வேதனை: அன்புமணி ராமதாஸ்

சென்னை: ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளை ஆளுநர் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையளிப்பதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,” ஆன்லைன் சூதாட்டம் என்ற கொடிய அரக்கனின் கோரத் தாண்டவத்தால் தமிழகத்தில் ஒவ்வொரு பொழுதும் ஓர் உயிர் பலியுடன் தான் விடிகிறது. மதுரை திருமங்கலம் அருகே பொறியியல் கல்லூரியில் படித்து வந்த வினோத்குமார் என்ற மாணவர் நேற்று தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

வினோத்குமார் டென்னிஸ் வீரர். அவரது குடும்பமும் அவரது கனவுகளை நிறைவேற்ற துணை நின்றது. ஆனால், ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி பணத்தை இழந்ததால் வினோத்குமார் தற்கொலை செய்து கொண்டார். சாதிக்க வேண்டியவர்களை சாகடித்துக் கொண்டிருக்கிறது ஆன்லைன் ரம்மி.

ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட வேண்டியது தான் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர். ஆனாலும் அது இன்னும் தடை செய்யப்படாததால் ஒன்றரை ஆண்டுகளில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். அவசர சட்டம் காலாவதியான பின்னர் 16 நாட்களில் 6 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளை தடுக்க வேண்டிய கடமை அரசுக்கு எந்த அளவுக்கு உள்ளதோ, அதே அளவுக்கு அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைக்க வேண்டிய கடமை ஆளுனருக்கும் இருக்கிறது. அதை உணராமல் தற்கொலைகளை ஆளுநர் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கிறது.

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி விட்டதுடன் கடமை முடிந்து விட்டதாக நினைத்து அரசு அமைதியாக வேடிக்கை பார்க்கக் கூடாது. ஆளுநரின் ஒப்புதலை பெறுவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும். அதற்கு ஆதரவளிக்க பாமக தயாராக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.