ஆயுதப்படை வீரர்களுக்கு தேசம் எப்போதும் கடமைபட்டிருக்கிறது – வெற்றி தினத்தில் பிரதமர் மோடி அஞ்சலி

புதுடெல்லி: “நமது தேசம் ஆயுதப்படை வீரர்களுக்கு எப்போதும் கடமைப்பட்டிருக்கிறது” என்று வெற்றி தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது. பாகிஸ்தானின் தோல்விக்குப் பிறகு, ஜெனரல் அமீர் அப்துல்லா கான் நியாசி தலைமையிலான பாகிஸ்தான் படைகள் டிசம்பர் 16 அன்று லெப்டினன்ட் ஜெனரல் ஜக்ஜித் சிங் அரோரா தலைமையிலான கூட்டணிப் படைகளிடம் டாக்காவில் நிபந்தனையின்றி சரணடைந்தன. மோதல்கள் முடிவுக்கு வந்ததை அடுத்து வங்கதேசம் சுதந்திரம் பெற்றது. இந்தப் போரில் 3000க்கும் மேலான இந்திய வீரர்கள் தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்திருந்தனர். இந்த மகத்தான வெற்றியைக் கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் டிச.16ம் நாள் விஜய் திவாஸ் என்னும் வெற்றி நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நாளில் போரில் உயிர் தியாகம் செய்த வீரர்கள் நினைவு கூரப்பட்டு அவர்களுக்கு விமரிசையாக அஞ்சலி செலுத்தப்படுகிறது. இன்றைய வெற்றி தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது முப்படை தளபதிகளும் அஞ்சலி செலுத்தினர்.

இதற்கிடையில் வெற்றிதினம் என்னும் விஜய் திவாஸ் நாளில் பல்வேறு தலைவர்களும் உயிர்த் தியாகம் செய்த வீரர்களை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்துள்ளனர்.

குடியரசுத்தலைவர் ட்வீட்: வெற்றி தினம் குறித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது ட்விட்டர் பக்கத்தில் , ” இந்த வெற்றி நாளில் 1971ம் ஆண்டு போரில் நாட்டிற்காக வீரதீரத்துடன் போரிட்டு உயிர்தியாகம் செய்த அனைத்து வீரர்களையும் நெகிழ்ச்சியுடன் நினைவு கூறுகிறேன். அவர்களுடைய தன்னிகரில்லாத துணிச்சலும், தியாகமும் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஊக்கமாக உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

பிரதமர் நன்றி: பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “கடந்த 1971ம் ஆண்டு நடந்த போரில் வீரதீரத்துடன் போரிட்டு இந்தியாவின் வெற்றியை உறுதி செய்து தந்த அனைத்து ஆயுதப்படை வீரர்களுக்கும் இந்த வெற்றி தினத்தில் எனது மரியாதையை செலுத்துகிறேன். நமது நாட்டை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் ஆயுதப்படை வீரர்களுக்கு தேசம் எப்போதும் கடமைப்பட்டிருக்கிறது” என்று நினைவுகூர்ந்துள்ளார்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் அஞ்சலி: இன்று வெற்றி தினத்தில் இந்தியாவின் ஆயுதப்படை வீரர்களின் துணிச்சல், வீரம், தியாகத்திற்கு இந்த தேசமே மரியாதை செலுத்துகிறது. கடந்த 1971ம் ஆண்டு போர் மனிதாபிமாமின்மையின் மீது மனிதகும் பெற்ற வெற்றியாகும். தவறானநடத்தைக்கு எதிரான அறம், அநீதிக்கு எதிராக நீதிக்கு கிடைத்த வெற்றியாகும். இந்தியா அதன் ஆயுதப்படை மீது பெருமை கொள்கிறது என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் போர் வீரர்கள் நினைவிடத்தில் அவர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நினைவுக் குறிப்பிலும் கையெழுத்திட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.