தஞ்சாவூரில் நடபாண்டிற்கான சம்பா நெல் கொள்முதல் தொடர்பான 4 மாவட்ட விவசாய பிரதிநிதிகள் உடன் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மற்றும் உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற முத்தரப்பு ஆலோசனைக் கூட்டத்தில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட ஆட்சியர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.
இந்த கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்கள் சந்தித்த உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் “நடப்பாண்டின் சம்பா கொள்முதலுக்கு முன்பே விவசாயிகளின் கருத்தரிந்து நடவடிக்கைகள் எடுக்க முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டதை தொடர்ந்து முத்தரப்பு கூட்டம் நடைபெற்றது. நெல் கொள்முதல் போன்று சிறு தானியங்களின் உற்பத்தியை பெருக்க சிறு தானியங்கள் கொள்முதல் குறித்து வரும் சட்டமன்ற கூட்டத்தொடரின் வேளாண் பட்ஜெட்டில் சில அறிவிப்புகள் வெளியாகும்.
விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் சிறுதானியங்களை நியாய விலை கடைகள் மூலம் மக்களுக்கு விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக தர்மபுரி, நீலகிரி மாவட்டங்களில் நியாய விலை கடைகள் மூலம் கேழ்வரகு விநியோகம் செய்யப்பட உள்ளது. இதேபோன்று மற்ற மாவட்ட நியாய விலை கடைகளிலும் சிறுதானியங்கள் விநியோகம் செய்யப்படும்” என அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.