வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: வெற்றி தினத்தையொட்டி டில்லியில் போர் நினைவு சின்னத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார். பாகிஸ்தான் போரில் உயிர்நீத்த வீரர்களுக்காக மரியாதை செலுத்தினர்.
கடந்த 1971ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது. வங்கதேசம் என்ற தனி நாடு உருவாக காரணமாக இருந்த இந்த போரில், பாகிஸ்தான் படைகள் சரணடைந்த நாளான டிசம்பர் 16ம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் வெற்றி தினமாக ‛விஜய் திவாஸ்’ என்ற பெயரில் இந்தியா கொண்டாடி வருகிறது.
பிரிவினைக்கு முன்னதாக மேற்கு பாகிஸ்தான் (தற்போதைய பாகிஸ்தான் நாடு) மற்றும் கிழக்கு பாகிஸ்தான் (தற்போதைய வங்கதேசம் நாடு) ஆகியவை ஒன்றிணைந்து இருந்தது.
1971ம் ஆண்டு மார்ச் 26ல் கிழக்கு பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக பாகிஸ்தானிடம் இருந்து தனியாக பிரிய வேண்டுமென கோரிக்கை விடுத்தது. பாகிஸ்தானில், வங்காள மொழி பேசிய மக்கள் மோசமாக நடத்தப்பட்டதோடு, தேர்தல் முடிவுகளிலும் குளறுபடி செய்யப்பட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் ஆத்திரமடைந்த கிழக்கு பாகிஸ்தான் மக்கள், மேற்கு பாகிஸ்தானுக்கு எதிராக விடுதலைப் போரை துவங்கினார்கள்.
அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா, கிழக்கு பாக்., மக்களுடைய விடுதலை போருக்கு முழு ஆதரவு அளித்தார். 1971, டிச.,3ல் ஆபரேஷன் கெங்கிஸ் கான் என்ற பெயரில் பாகிஸ்தான் படைகள் இந்தியாவின் 11 விமானப் படைத்தளங்கள் மீது தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடி கொடுத்து போரை துவக்குமாறு பிரதமர் இந்திரா உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து போர் துவங்கியது. 13 நாட்கள் நடந்த இப்போரின் முடிவில் டிச.,16ல் பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் அமீர் அப்துல்லா கான் நியாஸி, இந்திய ராணுவத்திடம் 93,000 படைவீரர்களோடு சரணடைந்தார்.
இந்தப் போருக்குப் பிறகு கிழக்கு பாகிஸ்தான் வங்கதேசமாகவும், மேற்கு பாகிஸ்தான் இன்றைய பாகிஸ்தானாகவும் பிரிந்தன. இதன் வெற்றி நாளான இன்று, டில்லியில் உள்ள போர் நினைவு சின்னத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement