சின்னமனூர்: சின்னமனூர் அருகே ஹைவேவிஸ் மலைக்கிராம பகுதிகளில் காட்டு யானைகள் சுற்றித் திரிவதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சின்னமனூர் அருகே 53வது கிலோ மீட்டரில் மேகமலை துவங்கி மணலாறு கடந்து ஏழாவது மலை கிராமமான இரவங்கலாரில் நிறைவடையும் ஹைவேவிஸ் பேரூராட்சியாக உள்ளது. தொடர்ந்து மேகமலை பகுதிகளில் கடனா, அந்துவான், ஆனந்தா, கலெக்டர் கார்டு என கூடுதல் காப்பி விவசாயமும் தொடர்ந்து நடந்து வருகிறது.
மத்திய, மாநில அரசுகள் மேகமலையை, வனச்சரணலாயமாக அறிவித்துள்ளது. இதனால் 1.50 லட்சம் ஏக்கர் அளவில் பாதுகாக்கப்பட்ட வனத்தில் யானை, சிறுத்தை, காட்டுமாடு, மான், பாம்பு, சிங்கவால் குரங்கு, கரடி உள்ளிட்ட விலங்கினங்கள் அதிகளவில் வசித்து வருகின்றன. தென்பழனி மலை அடிவாரத்தில் இருந்து 18 கொண்டை ஊசி வளைவுகளுடன் இந்த ஹைவேஸ் மலைச்சாலை அமைந்துள்ளது.
இப்பகுதியில் சர்வ சாதாரணமாக யானைக் கூட்டங்களும், காட்டு மாடுகளும், வீட்டு குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும், அணைகளுக்குள்ளும், தேயிலைத் தோட்ட பகுதிகளுக்குள்ளும் நுழைந்து இரை தேடிச் செல்லும. அத்துடன் அப்பகுதிகளில் வேலை செய்து கொண்டிருக்கும் தொழிலாளர்கள் திடீரென வருகின்ற யானை மற்றும் காட்டுமாடுகளை கண்டவுடன் தப்பித்து ஓடுவது தொடர்கதையாக உள்ளது. இருந்தபோதிலும் கடந்த ஆண்டுகளில் பல தொழிலாளர்களை சாலையை கடக்கும் யானைகள் அடித்து கொன்றுள்ளன.
இப்பகுதியில் ஹைவேவிஸ், தூவானம், மணலாறு, வெண்ணியார், இரவங்கலார் ஆகிய அணைப்பகுதிகளில் காட்டு யானைகள் கூட்டம் அதிகளவில் சுற்றித்திரிகிறது. இப்பகுதியில் தேயிலை தோட்டப் பகுதிகளுக்குள் நுழைந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது. கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கூட்டமாக உலா வருகிறது. இதுகுறித்து மலைக்கிராம மக்கள் கூறுகையில், மாலை 6 மணிக்கு மேல் மலைக்கிராமத்திற்கு பொதுமக்கள் யாரும் செல்வதில்லை. இதன் காரணமாக வீடுகளுக்கு தேவையான அரிசி, பருப்பு, கடலை எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க கூட சிரமமாக உள்ளது. இப்பகுதியில் சுற்றித்திரியும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.