100 நாட்கள்… 8 மாநிலங்கள்… எடுபட்டதா ராகுலில் இந்திய ஒற்றுமை பயணம்?

அகில இந்திய
காங்கிரஸ்
கட்சி… இந்தியாவில் 135 ஆண்டுகளை கடந்து நிற்கும் ஒரே அரசியல் கட்சி. கடந்த சில ஆண்டுகளாக தொடர் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதிலிருந்து மீண்டு வரும் வகையிலும், தேசிய அளவில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் இந்திய ஒற்றுமை பயணத்தை ராகுல் காந்தி தொடங்கினார். செப்டம்பர் 7ஆம் தேதி தமிழகத்தில் தொடங்கிய நடைபயணம் கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் வழியாக ராஜஸ்தான் மாநிலத்தை அடைந்துள்ளது.

100வது நாளை எட்டியது

இந்த சூழலில் இன்றைய தினம் இந்திய ஒற்றுமை பயணம் 100வது நாளை எட்டியுள்ளது. சமீபத்தில் நடந்த ஹிமாச்சல் பிரதேசம், குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல்களில் கூட கவனம் செலுத்தாமல் தனது நடைபயணத்தை ராகுல் காந்தி தொடர்ந்து கொண்டிருக்கிறார். இதற்கிடையில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு, பதவியேற்பு போன்ற விஷயங்களும் அரங்கேறின.

ராகுல் காந்திக்கு வரவேற்பு

இதுவரை 2,800 கிலோமீட்டர் தூர நடைபயணத்தை மேற்கொண்டுள்ள ராகுல் காந்திக்கு வழிநெடுகிலும் திரளான கட்சியினர் மற்றும் பொதுமக்களின் வரவேற்பை பெற்றார். ராகுலை பார்க்கவும், அவரது ஒற்றுமை பயணத்தில் கலந்து கொள்ளவும் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள், இளைஞர்கள், பெண்கள், மாணவ, மாணவிகள், சிறுவர், சிறுமியர்கள் எனப் பலரும் கைகோர்த்தனர்.

தேர்தல் அரசியல்

அதுமட்டுமின்றி பிரபலங்கள், எழுத்தாளர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் உள்ளிட்டோரும் பங்கேற்றது கவனம் பெற்றது. இருப்பினும் ராகுலின் பயணம் வாக்குகளாக மாறுமா? என்பது தான் கேள்வியாக முன்வந்து நிற்கிறது. தேர்தல் அரசியலில் வாக்குகளுக்கு தான் அதிக மதிப்பு. அதுவே நாட்டின் அரசியலை தீர்மானிக்கிறது.

பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் மத்தியில் அசுர பலத்துடன் பாஜக ஆட்சிக் கட்டிலில் இருக்கிறது. இதை வரும் 2024 தேர்தலில் முறியடிக்க முடியுமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக தொடர்கிறது. அடுத்ததாக ஹரியானா, உத்தரப் பிரதேசம், டெல்லி, பஞ்சாப் வழியாக சென்று ஜம்மு காஷ்மீரில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் முடிவடைகிறது.

சரியும் காங்கிரஸ் செல்வாக்கு

2019 மக்களவை தேர்தலுக்கு பின் காங்கிரஸின் அரசியல் இறங்குமுகமாக தான் உள்ளது. மூத்த தலைவர்கள் அதிருப்தி, வேறு கட்சிக்கு தாவுதல், உட்கட்சி பூசல், சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் தோல்விகள் என அடி மேல் அடி விழுந்துள்ளது. அடுத்ததாக 2024 மக்களவை தேர்தலை தான் மிக முக்கியமான விஷயமாக தேசிய கட்சிகள் முதல் பிராந்திய கட்சிகள் வரை பார்க்கின்றன.

மூன்றாவது அணி சர்ச்சை

பாஜகவை எதிர்த்து களம் காண தெலங்கானாவின் சந்திரசேகர் ராவ், பிகாரின் நிதிஷ் குமார், மேற்குவங்கத்தின் மம்தா பானர்ஜி, டெல்லியின் அரவிந்த் கெஜ்ரிவால் என பலரும் மூன்றாவது அணிக்கான வியூகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில் காங்கிரஸ் உடனடியாக விழித்துக் கொள்ளாவிட்டால் அப்புறம் எழுந்திருக்கவே முடியாது. இத்தகைய சூழலில் இந்திய ஒற்றுமை பயணம் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.