கோவை: “தான் கையில் கட்டியிருக்கும் வாட்ச், ரபேஃல் விமானங்களை இந்தியா ஆர்டர் செய்தபோது, அந்த விமானத்தின் பாகங்களை வைத்து செய்யப்பட்டது என்றும், அந்த 500 வாட்ச்களில் 149-வது வாட்ச் தன்னுடையது” என்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கோவையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சனிக்கிழமையன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் சமூக வலைதளங்களில், ட்ரெண்டாகி வரும் அவர் கையில் கட்டியுள்ள ரூ.3.50 லட்சம் மதிப்புள்ள வாட்ச் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இப்போது புதிதாக, நாம் அணியும் சட்டை, வேட்டி, நடந்து செல்வது, கார், இவற்றையெல்லாம் ஒப்பிடுவதைத்தான் இப்போது புதிதாக ஆரம்பித்துள்ளனர்.
நான் கையில் கட்டியிருக்கும் வாட்ச், ரபேஃல் விமானங்களை இந்தியா ஆர்டர் செய்தபோது, அந்த விமானத்தின் பாகங்களை வைத்து 500 வாட்ச்கள் செய்யப்பட்டன. அது ஒரு கலெக்டட் எடிஷன், ஸ்பெஷல் எடிஷன். இந்த வாட்சோட பெயரே, ரபேஃல் ஸ்பெஷல் எடிஷன்.
ரபேஃல் விமானத்தில் என்னவெல்லாம் பாகங்கள் இருக்கிறதோ, நான் கட்டியிருக்கும் வாட்ச்சில், அந்த பாகங்கள் எல்லாம் இருக்கிறது. எனக்கு ரஃபேல் விமானத்தை ஓட்டக்கூடிய பாக்கியம் கிடைக்கவில்லை. ஏனென்றால் நான் ஒரு பெரிய தேசியவாதி. ரஃபேல் விமானத்தை ஓட்டக்கூடிய பாக்கியம் கிடைக்கல, அதனால், அந்த ரஃபேல் விமானத்துக்குப் பக்கத்தில் இருக்கக்கூடிய இந்த வாட்சை கட்டியிருக்கிறேன். அந்த 500 வாட்ச் செய்யப்பட்டதில் 149-வது வாட்ச் என்னுடையது.
இதில் பார்த்தால் தெரியும். Dassault Aviation இவர்கள்தான் ரஃபேல் விமானத்தை உருவாக்குபவர்கள். அந்த ரஃபேல் விமானத்தின் பாகங்களில் இருந்து இந்த வாட்ச் செய்யப்பட்டது. உலகத்தில் 500 வாட்ச்கள்தான் இருக்கிறது. அதனால், என் உடம்பில் உயிர் ஓடுகிற வரைக்கும் இந்த வாட்ச் என்னிடம் இருக்கும்.
உலகம் முழுவதும் உள்ள கலெக்டட் எடிஷன். ரஃபேல் விமானத்தின் வாட்சை நம்மைத் தவிர யார் வாங்குவார்கள்? இந்தியர்கள்தான் வாங்க முடியும். அதனால், நம்முடைய நாட்டிற்காக ரஃபேல் விமானத்தின் பாகங்களில் இருந்து Dassault Aviation நிறுவனத்தால் செய்யப்பட்ட வாட்சை நான் கட்டியிருக்கிறேன். ஏன் என்றால் நான் தேசியவாதி. நான் பிரிவினைவாதம் பேசுகிறவன் கிடையாது.
ரஃபேல் நம் நாட்டிற்குக் கிடைத்திருக்ககூடய மிகப்பெரிய பொக்கிஷம். ரஃபேல் விமானத்தின் வருகைக்குப் பின்னர், rules of war மாற ஆரம்பித்துள்ளது” என்று அவர் கூறியிருந்தார். இது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகி வருகிறது.