நாகர்கோவில்: வலம்புரிவிளை உரக்கிடங்கில், இன்று 2 வது நாளாக தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நாகர்கோவில் மாநகராட்சி வலம்புரிவிளை குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு, பல நாட்கள் போராடி தீயை அணைப்பது வாடிக்கையாக உள்ளது. தற்போது குப்பைகள் அந்தந்த பகுதிகளிலேயே தரம் பிரிக்கப்பட்டு, மக்கும் குப்பைகள் உரமாக மாற்றப்படுகிறது.
மக்காத குப்பைகள் தொழிற்சாலைக்கு எரிபொருளாக அனுப்பப்படுகிறது. தரம் பிரிக்கும் பணி நடந்து வரும் நிலையில் அவ்வப்போது தீ பிடிப்பதும் தொடர் கதையாகி உள்ளது. இந்த வருடத்தில் 8 வது முறையாக நேற்று மீண்டும் தீ பிடித்தது. காற்றும் வீசியதால், தீ வேகமாக பரவியது. இதனையடுத்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்யகுமார் தலைமையில் 30 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இரவு வரை தீயணைப்பு பணி நடந்தது.
பின்னர் இன்று காலை முதல் மீண்டும் 2 வது நாளாக தீயை அணைக்கும் தொடங்கியது. ஜேசிபி மூலம் குப்பைகளை கிளறி தீயை அணைத்து வருகிறார்கள். 3 தீயணைப்பு வண்டிகள் இந்த பணிக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மாநகராட்சி சார்பில் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. தீ அணைக்கப்பட்டாலும் புகை வந்து கொண்டே இருப்பதால், மீண்டும் பிடிக்கும் நிலை உள்ளது. இதையடுத்து புகை வரும் பகுதியில் அதிகளவில் தண்ணீரை அடித்து கட்டுப்படுத்தும் பணி நடக்கிறது.