சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலோடு தொடர்பு திருச்சி முகாம் சிறையில் 9 பேர் கைது: என்ஐஏ அதிகாரிகள் அதிரடி; சென்னைக்கு அழைத்து சென்றனர்

திருச்சி: திருச்சி முகாம் சிறையில் இருந்து கொண்டு சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலோடு தொடர்பில் இருந்த 5 தமிழர்கள், 4 இலங்கையை சேர்ந்தவர் என 9 பேரை நேற்று என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். அவர்கள் பலத்த பாதுகாப்புடன் சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டனர். திருச்சி மத்திய சிறையில் 1,500க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் போலி பாஸ்போர்ட், குற்ற வழக்குகளில் தொடர்புடைய வெளிநாட்டினர் மற்றும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இலங்கை, பல்கேரியா, தென் கொரியா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, மங்கோலியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 132 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கேரள மாநிலம், கொச்சி என்.ஐ.ஏ எஸ்பி தர்மராஜ் தலைமையில் 6 பேர் கொண்ட குழு நேற்று காலை திருச்சி சிறப்பு முகாம் சிறைக்கு வந்தனர். அங்கு தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, முக்கிய ஆவணங்களை எடுத்துக் கொண்டு, திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமாரை நேரில் சந்தித்து என்.ஐ.ஏ எஸ்பி தர்மராஜ் பேசினார். பிறகு அங்கிருந்து மீண்டும் முகாம் சிறைக்கு வந்தார். இதையடுத்து, மாலை வரை சிறப்பு முகாமில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் முகாமில் இருந்த குணசேகரன், புஷ்பராஜா(எ) பூக்குட்டி கண்ணா, முகமது அஸ்மின், அலக பெருமக சுனில் காமினி பான்சி(எ) நீலகண்டன், ஸ்டான்லி கென்னடி பெர்னான்டஸ், தனுகா ரோஷன், லடியா, வெல்லா சுரங்கா, திலீபன் ஆகிய 9 பேரை கைது செய்து தனி வாகனம் மூலம் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.

இது குறித்து என்ஐஏ அதிகாரிகள் கூறுகையில், ‘‘2021 மார்ச் மாதம் கேரளாவின் அரபிக் கடலில் விழிஞ்சம் துறைமுகம் அருகே கடற்கரையில் ஹெராயின் மற்றும் ஆயுதங்கள் கடத்தி சென்ற இலங்கை படகு சிக்கியது. அதில் பல கோடி மதிப்புள்ள 300.323 கிலோ ஹெராயின், 5 ஏ.கே.-47 துப்பாக்கிகள், 1,000 எண்ணிக்கையில் 9 எம்.எம் தோட்டாக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டன. இது தொடர்பாக இலங்கையை சேர்ந்த நந்தனா, தாசப்பிரியா, குணசேகரா, செனாரத், ரணசிங்கா, நிசாங்கா ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த கடத்தலில் பாலஸ்தீனைத்தை சேர்ந்த போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என தெரியவந்தது. கும்பலில் தொடர்புடையவர்களிடம் அவ்வப்போது திருச்சி முகாம் சிறையில் இருந்து செல்போன் மூலமாக பேச்சுவார்த்தை நடந்தது. தெரியவந்தது. ஆய்வில் இங்கிருந்த இலங்கை தமிழர்கள் செல்போன் மூலம் வெளியில் இருந்த கடத்தல் கும்பலிடம் தொடர்பு கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனடிப்படையில் 9 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றனர்.

* சிக்கியது எப்படி?
கடந்த ஜூலை மாதம் திருச்சி முகாம் சிறையில் என்ஐஏ குழு அதிரடி சோதனை நடத்தினர். இதில், மேற்கண்ட 9 நபர்களிடம் இருந்து செல்போன்கள், லேப்டாப், நகைகள், சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில் இருந்த பதிவுகளை ஆய்வு செய்த போது, சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்துதான் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

* பூந்தமல்லி கோர்ட்டில் இன்று ஆஜர்
திருச்சி சிறப்பு முகாமில் கைதான 9 பேரும் இன்று சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். தொடர்ந்து, 9 பேரையும் புழல் சிறையில் அடைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.