புதுடெல்லி: வரி ஏய்ப்பு, போலி ரசீதுகள் மூலம் உள்ளீட்டு வரி வரவை பெற்றது, முறையான கணக்கு தாக்கல் செய்யாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, ஜூவல்லரி, ரியல் எஸ்டேட் துறை உட்பட 50,000 நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். 15 முதல் 30 நாட்களுக்குள் இதற்கு விளக்கம் அளிக்குமாறு கெடு விதிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி அமல்படுத்தியதில் இருந்து முதல் முறையாக இந்த ஒருங்கிணைந்த வரி தணிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் ஜிஎஸ்டி வரி நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்பட்டது. மாநிலங்கள் மற்றும் தொழில்துறையினர் கோரிக்கைகளுக்கு ஏற்ப, வரி கணக்கு தாக்கல் செய்வது, பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி விகிதம் உட்பட பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இருப்பினும், ஜிஎஸ்டி வரி பெரும்பாலான வியாபாரிகளுக்கு பெரும் தலைவலியாகவே உள்ளது. முறையாக கணக்கு தாக்கல் செய்வது பற்றி தெரியாமலேயே பலர் சிக்கலில் சிக்கி தவிக்கின்றனர். இந்நிலையில், கடந்த 2017ம் ஆண்டு ஜிஎஸ்டி வரி விதிப்பு அறிமுகம் செய்தது முதல், இதுவரையிலான கணக்குகளை ஜிஎஸ்டி அதிகாரிகள் ஒருங்கிணைந்த தணிக்கை செய்துள்ளனர். இதன்படி, நாடு முழுவதும் மொத்தம் 50,000 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி அமலுக்கு வந்து முதல் 2 ஆண்டுகளான 2017-18 மற்றும் 2018-19 நிதியாண்டுகளில் கணக்கு தாக்கல் செய்தது தொடர்பாக சில நிறுவனங்களுக்கும், 2019-20 மற்றும் 2020-21 நிதியாண்டுகளில், கடந்த ஆண்டு டிசம்பர் வரை தாக்கல் செய்யப்பட்ட கணக்குகள் அடிப்படையிலும் இந்த தணிக்கை மேற்கொள்ளப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜிஎஸ்டி அதிகாரி ஒருவர் கூறியதாவது: மத்திய ஜிஎஸ்டி சட்ட விதிகளின்படி, கணக்குகளில் முறைகேடு, விதி மீறல்கள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தவறாக கணக்குகளை சமர்ப்பித்தது, வரி ஏய்ப்பு, போலி ரசீதுகளை தாக்கல் செய்து உள்ளீட்டு வரி வரவை (இன்புட் வரி கிரெடிட்) பெற்றது, விற்பனை மற்றும் கொள்முதலின்போது பொருட்கள் மற்றும் சேவைகள் மற்றும் ஏற்றுமதி பொருட்களை தவறாக வகைப்படுத்தியது என பல்வேறு காரணங்களுக்காக இந்த நோட்டீஸ்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் வரை மொத்தம் 20,000 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளன. அதன் பிறகு 30,000க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். சில பெரிய நிறுவனங்களை பொறுத்தவரை இந்த தணிக்கை 3 மாதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிறிய வியாபார நிறுவனங்களை பொறுத்தவரை ஒரு சில வாரங்களில் தணிக்கை முடிக்கப்பட்டு விட்டது. வரி ஏய்ப்புகளை, முறைகேடுகளை கண்டறிந்து, ஜிஎஸ்டி வரி வசூலை அதிகரிப்பதே இதன் நோக்கம். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
மற்றொரு அதிகாரி கூறுகையில், ‘‘ஜிஎஸ்டி முறைகேடுகள் நடக்க அதிக சாத்தியமுள்ள துறைகளை சார்ந்த நிறுவனங்களின் கணக்குகள், துறை அதிகாரிகளின் அவ்வப்போதைய புகார்கள் போன்றவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, ஜூவல்லரி மற்றும் நவரத்தின விற்பனை, ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு அதிக நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. பெரு நகரங்களில் மட்டுமின்றி சிறு நகரங்களிலும் ஜிஎஸ்டி ஆணையரக அதிகாரிகள் தெரிவித்த தகவல்களின் அடிப்படையிலும் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் 15 முதல் 30 நாட்களுக்குள் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.
ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நிறுவன கணக்குகள் ஒருங்கிணைந்த முறையில் தொடர் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன’’ என்றார். நாடு முழுவதும் சுமார் 1.4 கோடிக்கும் மேற்பட்டோர் ஜிஎஸ்டியில் பதிவு செய்துள்ளனர். சில சிறு நிறுவனத்தினர், வியாபாரிகள் ஜிஎஸ்டி தொடர்பாக இன்னும் புரிதல் இல்லாமல் இருக்கின்றனர். சில சமயம் தெரியாமல் தவறான தகவல்களை கொடுத்து சிக்கலில் சிக்கிக் கொள்கின்றனர். இந்த நிலையில் 50,000க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட விவகாரம் சிறு வியாபாரிகள், நிறுவனங்களிடையே அதிர்ச்சியை ’ ஏற்படுத்தியுள்ளது.