உன்னாவ் மாவட்டத்தில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்துவரும் முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் செங்கார், அவருடைய மகளின் திருமணத்திற்கு இடைக்கால ஜாமீன் கோரி மனு அளித்துள்ளார்.
2017ஆம் ஆண்டு மைனர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், விசாரணை நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை பெற்ற பாஜக முன்னாள் எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார், தனது மகளின் திருமணத்திற்காக இடைக்கால ஜாமீன் கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்திருக்கும் மனுவில், “பிப்ரவரி 8, 2023ல் எனது மகளின் திருமணம் நடைபெறவிருக்கிறது. எனது மகளின் திருமணத்திற்கான சடங்குகள் ஜனவரி மாதத்தில் இருந்தே தொடங்கும். அதற்காக இரண்டு மாதங்களுக்கு எனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கவேண்டும்” என்று நீதிமன்றத்தில் செங்கர் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் குல்தீப் சிங் தாக்கல் செய்த ஜாமீன் மனு, நீதிபதிகள் சித்தார்த் மிருதுல் மற்றும் தல்வந்த் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மனுவினை மற்றொரு அமர்வு முன் விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டனர். இதுகுறித்த நீதிபதிகள் உத்தரவில், “எங்களில் ஒருவர், அதாவது நீதிபதி தல்வந்த் சிங், தலைமை நீதிபதியின் வழிகாட்டுதல்களைப் பெறுவதற்கு உட்பட்ட உறுப்பினராக இல்லாத ஒரு அமர்வு முன் இந்த மனு மீதான விண்ணப்பத்தை பட்டியலிடவும்” என்று கூறி, வழக்கை வரும் வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.
கடந்த டிசம்பர் 16, 2019 அன்று குல்தீப் செங்கரை, குற்றவாளியாக அறிவித்து ஆயுள் தண்டனை உத்தரவை பிறப்பித்தது டெல்லி நீதிமன்றம். அப்போது தன்மீதான ஆயுள் தண்டனை தீர்ப்பை எதிர்த்திருந்தார் செங்கர். ஆனால் IPC பிரிவு 376 (பாலியல் வன்கொடுமை) மற்றும் POCSO சட்டத்தின் 5(c) முதலிய 6 பிரிவுகளின் கீழ் பாலியல் வன்கொடுமை வழக்கில் குல்தீப்பை குற்றவாளி என்று நீதிமன்றம் உறுதி செய்து, பாதிக்கப்பட்டவரின் சாட்சியம் “கறையற்றது மற்றும் உண்மையானது” எனக் கூறி தண்டனை விதித்தது.
மேலும் அப்போது பேசியிருந்த மாவட்ட நீதிபதி தர்மேஷ், “எம்எல்ஏ குல்தீப் ஒரு பொது ஊழியர், மக்கள் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளனர், ஆனால் அவர் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார். அனைத்து கொடுமையான நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு எதிராக நடத்தப்பட்டுள்ளன” என்று வேதனையோடு கூறியிருந்தார்.
உன்னாவ் மாவட்டத்தில் நடந்த சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு, ஜூன் 4, 2017 அன்று தொடங்கியது. 17 வயதான பாதிக்கப்பட்ட பெண்ணை உத்தரபிரதேசத்தின் பாங்கர்மாவ்விலிருந்து கடத்தி சென்ற பாஜக எம்எல்ஏ குல்தீப் செங்கர், நான்கு முறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வழக்கு தொடரப்பட்டு இரண்டு வருடங்களுக்கு பிறகு ஆகஸ்ட் 2019 இல், குற்றம் சாட்டப்பட்ட குல்தீப் சிங் செங்கார் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார்.
மேலும் சிறுமியின் விவகாரத்தை தொடர்ந்து, ஏப்ரல் 3, 2018 அன்று, சிறுமியின் தந்தை சட்டவிரோத ஆயுத வழக்கில் கைது செய்யப்பட்டு, சில நாட்களுக்குப் பிறகு, ஏப்ரல் 9, 2018 அன்று நீதிமன்றக் காவலில் இறந்தார். மற்றும் ஜூலை 28, 2019 அன்று, பாதிக்கப்பட்ட பெண், அவரது இரண்டு அத்தைகள் மற்றும் அவர்களது வழக்கறிஞர் என அனைவரும் பயணம் செய்த கார் மீது வேகமாக வந்த டிரக் மோதியதில், பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது வழக்கறிஞரும் படுகாயமடைந்த நிலையில் அவரது அத்தைகள் கொல்லப்பட்டனர். அப்போது இந்தியா முழுவதும் இந்த வழக்கின் போக்கு அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது.
இதன் காரணமாக உச்சநீதிமன்றம் நேரடி கண்காணிப்பில் இந்த வழக்கை கொண்டுவந்து, ஆகஸ்ட் 1, 2019 அன்று, பாலியல் வன்கொடுமை வழக்கு மற்றும் அது தொடர்பான நான்கு வழக்குகளை டெல்லிக்கு மாற்றியது. மேலும் விசாரணையை 45 நாட்களில் முடிக்க விசாரணை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டு, பின்னர் குற்றங்கள் உறுதிசெய்யப்பட்டு பாஜக எம்எல்ஏ குல்தீப் செங்காருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது மகளின் திருமணத்திற்காக இரண்டு மாதங்களுக்கு இடைக்கால ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார் முன்னாள் பாஜக எம் எல் ஏ குல்தீப் சிங் செங்கார். மனுமீதான விசாரணை வரும் வியாழக்கிழமை நடபெறவிருக்கிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM