திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரூ.300 கோடியில் மேம்பாட்டு பணி: 2 ஆண்டுகளில் முடியும் என அறிவிப்பு

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடாகும். இக்கோயிலை திருப்பதிக்கு இணையாக மேம்படுத்துவதற்காக இந்து சமய அறநிலையத்துறையும், பிரபல சாப்ட்வேர் நிறுவனமான ஹெச்சிஎல்லும் இணைந்து ரூ.300 கோடி செலவில் மெகா மேமம்பாட்டு திட்டப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. ரூ.200 கோடியில் கோயில் உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துதல், பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய வரிசை முறை, காத்திருப்பு அறை, நடைபாதை, மருத்துவ மையம், ஓய்வறை அமைத்தல், பொது அறிவிப்பு கட்டுப்பாட்டு அறை, தீத்தடுப்பு கண்காணிப்பு, முடி காணிக்கை செலுத்தும் இடம், பொருட்கள் பாதுகாப்பு அறை, அன்னதானக் கூடம், கோயில் வளாகத்தில் சாலை வசதி உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதோடு கோயில் நிதி ரூ.100 கோடியில் பக்தர்கள் தங்கும் விடுதி, சலவைக் கூடம், சுகாதார வளாகம், பேருந்து நிலையம், திருமண மண்டபங்கள், பஞ்சாமிர்தம் மற்றும் விபூதி தயாரிப்புக் கட்டிடம், பணியாளர் குடியிருப்பு, கோயிலின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் கடல் அரிப்பைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு தடுப்புச் சுவர் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஒரே நேரத்தில் 1000 பேர் அமர்ந்து உணவருந்தும் வகையில் அன்னதானக் கூடம் கட்டப்பட்டு வருகிறது. கோயில் பேருந்து நிலையத்தில் இருந்து கடற்கரை செல்லும் சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. திருச்செந்தூர் கோயில் திருப்பதிக்கு இணையாவதற்கான பணிகள் பக்தர்கள், வியாபாரிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்திருப்பணிகள் 2 ஆண்டுகளில் முடியும் என்று அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.