“நானொரு மக்கள் பிரதிநிதி. அதேநேரம்…”- பேரவைக்கு குழந்தையுடன் சென்ற மகாராஷ்ட்ரா எம்எல்ஏ!

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்க பெண் எம்.எல்.ஏ. ஒருவர், தனது இரண்டு மாத கைக்குழந்தையுடன் உற்சாகத்துடன் வந்தது பல்வேறு தரப்பினரையும் கவர்ந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடர் இன்று நாக்பூரில் துவங்கியது. பொதுவாகவே சட்டப்பேரவை கூட்டத் தொடர் துவங்குகிறது என்றாலே களேபரங்களுக்கும், வித்தியாசமான நிகழ்ச்சிகளுக்கும் பஞ்சமிருக்காது. அந்தவகையில் மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை குளிர்கால கூட்டத் தொடருக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் எம்.எல்.ஏ. ஒருவர், தனது இரண்டரை மாத கைக்குழந்தையுடன் வந்து பங்குபெற்றதுதான் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
image
நாசிக் தியோலாலி தொகுதியைச் சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ.வான சரோஜ் பாபுலால் அஹிரேவுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி தான் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், கொரோனா காலக்கட்டம் மற்றும் சிவசேனா கட்சி உட்கட்சிப் பூசலால் பிரிந்ததற்குப் பின்னர், இன்று சட்டப்பேரவை கூட்டத் தொடர் துவங்கியது. இதனை தவற விட்டுவிடக் கூடாது என்பதற்காக, தனது இரண்டு மாத ஆண் குழந்தை மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இருவருடன் எம்.எல்.ஏ. சரோஜ் பாபுலால் அஹிரே அவைக்கு வந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
கையில் குழந்தை நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாலும், அதனை வாங்கி கொஞ்சுவதும், பெண் எம்.எல்.ஏ. சரோஜ் பாபுலால் அஹிரே மற்றும் குழந்தையுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ளவும், போட்டோ எடுத்துக்கொள்ளவும் உறுப்பினர்கள் பலரும் ஆர்வம் காட்டினர். இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
image
இதுகுறித்து சரோஜ் பாபுலால் அஹிரே செய்தியாளர்களிடம் கூறும்போது, “நான் ஒரு குழந்தைக்கு தாய். அதேவேளையில் மக்களின் பிரதிநிதி. கடந்த இரண்டரை ஆண்டுகாலமாக கொரோனா தொற்றுநோயால், நாக்பூரில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறவில்லை. தற்போது நான் ஒரு குழந்தைக்கு தாய் தான் என்றாலும், எனது கருத்துகளை முன்வைக்கவும், தொகுதி சார்பான கேள்விகளை கேட்கவும், என்னுடைய தொகுதியின் வாக்காளர்களுக்கான பதில்களை பெறவும் இங்கு வந்துள்ளேன். என் குடும்பத்தினர் என்னுடன் இங்கு வந்துள்ளனர். அவைக்குள் நான் சென்றதும், அவர்கள் என் குழந்தையை பார்த்துக்கொள்வார்கள்” என்று தெரிவித்தார்.
இந்த கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று, கர்நாடகா – மகாராஷ்டிரா எல்லைப் பிரச்சனை மற்றும் பெல்காம் எல்லைக்குள் நுழைய தேசியவாத காங்கிரஸ் தலைவர்களுக்கு அனுமதி கொடுக்கப்படாதது உள்ளிட்ட சம்பவங்கள் பெரிய அளவில் எதிரொலித்தன.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.