'பரந்தூர் விமான நிலையத்தால் அடையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்' – அதிர்ச்சி ரிப்போர்ட்!

பரந்தூர் பசுமை விமான நிலையம் அமைந்தால் சென்னை அடையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அடையாறு வடிகால் பகுதியில்தான் விமான நிலைய கட்டுமான பணிகள் அமைய உள்ளதாக தெரிவித்து 31 சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை துறைக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் 65 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான சாத்தியக்கூறு அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளது. பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு 13 கிராம மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அரசின் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. பசுமை விமான நிலையம் அமைந்துள்ள பகுதி விவசாய நிலமாகவும் நீர்நிலை பகுதியாக இருப்பதாக கூறி கிராம மக்கள் 146வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

image
இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆர்வலர்கள் 31 பேர் கொண்ட குழுவினர் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை துறைக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். அதில் அவர்கள் குறிப்பிட்டிருக்கும் அதிர்ச்சி அளிக்கும் ரிப்போர்ட் விவரங்கள் இங்கே:
`2015 ஆம் ஆண்டு சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டதற்கு அடையாறில் நீர் பிடிப்பு பகுதியான செம்பரம்பாக்கத்தை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகப்படியான ஆக்கிரமிப்பு வெள்ளம் ஏற்பட ஒரு காரணமாக அமைந்தது. இந்நிலையில் தற்போது பரந்தூர் விமான நிலையம் அமைய உள்ள பகுதி 4,500 ஏக்கர் பரப்பில் 18 சதுர கிலோமீட்டர் அளவில் அமைய உள்ளது. இது நேரடியாக அடையாற்றிற்கு நீரை வெளியேற்றாமல் செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்திற்கு வரும் நீரின் அளவிற்கு காரணமாக உள்ளது.

எனவே விமான நிலைய கட்டுமான பணிகள் மேற்கொள்ளும் போது நீர்நிலை இணைப்புப் பகுதி பாதிக்கப்பட்டு பெருவெள்ளம் மற்றும் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் விமான நிலையம் அமையப் பெற்றால் அதை சுற்றிலும் நகரமயமாக்களும் ரியல் எஸ்டேட் போக்குவரத்து வசதிகள் என சுற்றிலும் உள்ள நீர்நிலைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் அதிக மழை பொழிவு இருக்கும் காலத்தில் பரந்தூர் விமான நிலையத்தால் சென்னை நகரத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அடையாறு ஆற்றின் மொத்த நீர் வெளியேற்றும் அளவு ஒரு வினாடிக்கு 3000 கன அடி என இருக்கும் நிலையில் பரந்தூர் பகுதியில் உள்ள நீர் நிலைகளில் இருந்து மட்டும் செம்பரம்பாக்கம் நீர் தேக்கத்திற்கு 3000 கன அடிக்கு மேல் மழை நீர் செல்லும் என தெரிவிக்கப்படுகிறது.

image
எனவே பரந்தூர் விமான நிலையம் அமையப் பெற்றால் அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என்பது மத்திய கணக்கு துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது. எனவே வருங்கால பேரிடரை கருத்தில் கொண்டு பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்’
– இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்படுகிறது. நீதியரசர் ஹரி பரந்தாமன், சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்தியானந் ஜெயராமன், பூவுலகில் நண்பர்களை சேர்ந்த வெற்றிச்செல்வன், கர்நாடக இசை பாடகர் டிஎம் கிருஷ்ணா உள்ளிட்ட 31 இயக்கத்தை சேர்ந்தவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
பரந்தூர் விமானநிலைய திட்டம் குறித்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, வேலு, அன்பரசன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை ஆலோசனை செய்ய உள்ளனர். கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்ற அறிவிப்பால் கிராம மக்களின் முற்றுகைப் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
தவற விடாதீர்: வெள்ளக்காடாக மாறியுள்ள பரந்தூர் விமான நிலைய அமைவிடம் – வல்லுனர்கள் ஆலோசனைSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.