பல மாநிலங்களும் தடை செய்ய கோருவதால் ஆன்லைன் விளையாட்டை தடுக்க புது சட்டம்: ஒன்றிய அமைச்சர் பரபரப்பு பேட்டி

பெங்களூரு: ஆன்லைன் விளையாட்டால் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு புதிய  கொள்கைகள் வகுக்கப்படும் அல்லது நாடாளுமன்றம் மூலம் புதிய சட்டம் கொண்டு  வரப்படும் என்று ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். இந்தியாவில் இளம் வயதினர் தொடங்கி பலரும் ஆன்லைன் விளையாட்டை விரும்பி விளையாடி வருகின்றனர். ‘ஃபேண்டஸி கேமிங்’ என்று வகைபடுத்தபடும் பல விளையாட்டுக்கள் சூதாட்டம் போல இருப்பதால், அதில் பண இழப்பிற்கான அபாயம் அதிகரித்துள்ளது. இதனால் தினமும் தற்கொலை போன்ற சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.

நாடு முழுவதும் 322 மாவட்டங்களில் ஆன்லைன் விளையாட்டால் ஏற்படும் பாதிப்பு குறித்து கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில் 65 சதவீதம் பேர் ஆன்லைன் விளையாட்டை சூதாட்டம் என்றும், அதனை தடை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரு வந்த ஒன்றிய ரயில்வே மற்றும் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நிருபர்களிடம் கூறுகையில், ‘ஆன்லைன் விளையாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அனைத்து மாநிலங்களின் தகவல் தொழில்நுட்ப அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினேன். ஆன்லைன் விளையாட்டால் ஏற்படும் பாதிப்புகள், தற்கொலைகள் குறித்து மாநில அமைச்சர்கள் கவலை தெரிவித்தனர். ஆன்லைன் விளையாட்டால் பலர் பாதிக்கப்படுகின்றனர்.

விசித்தரமான இந்த விளையாட்டை ஏன் மக்கள் விளையாடுகிறார்கள்? இதுபோன்ற விளையாட்டுகள் சமூகத்தின் நல்லிணக்கத்தை பாதிக்கிறது. அனைத்து தரப்பிடமும் ஆலோசனை நடத்த உள்ளோம். எனவே ஆன்லைன் விளையாட்டால் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு புதிய கொள்கைகள் வகுக்கப்படும் அல்லது நாடாளுமன்றம் மூலம் விரைவில் புதிய சட்டத்தை கொண்டு வர ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள தகவல் தொழில்நுட்ப மசோதாவை பொருத்தமட்டில், இந்தியாவின் டிஜிட்டல் மசோதா உலகிற்கே முன்மாதிரியாக இருக்கும்’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.