பெரியபாளையத்தில் குப்பை சூழ்ந்த அங்கன்வாடி மையம்: துர்நாற்றத்தால் அவதி

பெரியபாளையம்: திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் ஊராட்சியில் சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். குறிப்பாக, அம்பேத்கர் நகர் பகுதியில் சுமார் 600க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அம்பேத்கர் நகர் பகுதியில் மிகவும் பழுதடைந்த ஒரு பழைய வாடகை கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இங்கு சுமார் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த பழுதடைந்த கட்டிடத்தின் மேற்பரப்பு சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து இருப்பதால், மழைநீர் உள்ளே கசிகிறது.

மேலும் அக்கட்டிடம் உறுதியை இழந்து, எந்நேரத்திலும் இடிந்து விழும் அபாயநிலையில் உள்ளது. மழைநீர் ஒழுகுவதால், சமையலுக்கு தேவையான அத்தியாவசிய உணவு பொருட்கள் நனைந்து சேதமாகின்றன. மேலும், இந்த அங்கன்வாடி மைய கட்டிடத்தை சுற்றிலும் குப்பைக் கூளங்கள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், அந்த குப்பைக்கூளங்கள் பன்றிகள் கிளறி வருவதால் சாலை முழுவது சிதறி கிடக்கின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், பல்வேறு சுகாதார சீர்கேடுகள் நிலவி வருகின்றன.

மேலும், அப்பகுதி மக்களுக்கு பல்வேறு நோய்தொற்றுகள் பரவும் அபாயநிலையும் ஏற்பட்டிருக்கிறது. இங்குள்ள பூங்காவில் குழந்தைகள் விளையாடும் பொருட்களும் திருடு போய்விட்டது. எனவே, அம்பேத்கர் நகர் அங்கன்வாடி மைய கட்டிடத்தை சுற்றிலும் குவிந்துள்ள குப்பை கூளங்களை அகற்றி சீரமைக்கவும், அங்கு தூய்மை மற்றும் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளவும், பூங்காவில் காணாமல் போன குழந்தைகளின் விளையாட்டு பொருட்களை மீண்டும் நிர்மாணிக்கவும், பழைய அங்கன்வாடி மைய கட்டிடத்தை அகற்றிவிட்டு, அங்கு புதிய கட்டிடம் கட்டி தருவதற்கு மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.