பெலகாவியில் போராட்டம் நடத்த முயற்சி: 3 0 0 பேர் தடுத்து நிறுத்தம்

பெலகாவி மஹாராஷ்டிரா – கர்நாடகா எல்லை பிரச்னை தொடர்பாக, கர்நாடகாவின் பெலகாவியில் போராட்டம் நடத்தச் சென்ற சிவசேனா உத்தவ் பிரிவு, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்., தொண்டர்கள் 300க்கும் மேற்பட்டோர், எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். சிலரை போலீசார் கைது செய்தனர்.

கர்நாடகாவில், முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மஹராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா அதிருப்தி குழு, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.

குற்றச்சாட்டு

மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, மஹாராஷ்டிராவின் பம்பாய் மாகாணத்துக்கு உட்பட்ட பெலகாவி மற்றும் 814 கிராமங்கள் கர்நாடகா வசம் சென்றதாக, மஹாராஷ்டிரா குற்றஞ்சாட்டியது.

இந்த பகுதிகளை மீண்டும் மஹாராஷ்டிராவுடன் இணைக்க கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், இதை கர்நாடகா ஏற்றுக் கொள்ளவில்லை.

எனவே, இரு மாநிலங்களுக்கு இடையிலான எல்லை பிரச்னை கடந்த 50 ஆண்டுகளாக தொடர் கதையாகி உள்ளது.

இந்நிலையில், எல்லை பிரச்னை சமீபத்தில் தீவிரம் அடைந்தது. கர்நாடகாவுக்குள் வரும் மஹாராஷ்டிர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

இதை தொடர்ந்து பதற்றம் நிலவியது. இரு மாநில முதல்வர்களையும் மத்திய அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் அழைத்து பேசினார்.

எல்லை பிரச்னை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கு விசாரணை முடிவடையும் வரை, இரு தரப்பும் அமைதி காக்க அறிவுறுத்தினார். இதற்கு, இரு மாநில முதல்வர்களும் ஒப்புக்கொண்டனர்.

கர்நாடகா சட்டசபையின் குளிர்கால கூட்டத் தொடர், மஹாராஷ்டிரா எல்லையில் உள்ள பெலகாவில் நேற்று துவங்கியது.

கர்நாடகாவின் வட மாவட்டங்களின் வளர்ச்சிக்காகவும், எல்லை பிரச்னை தங்களுக்கு சாதகமாக இருப்பதற்காகவும், பெலகாவியிலும் சட்டசபை கட்டடத்தை கர்நாடக மாநில அரசு கட்டியுள்ளது. ஆண்டுதோறும் குளிர்கால கூட்டத் தொடர் இங்கு நடக்கும்.

இந்த கூட்டத் தொடர் நடக்கும் நேரத்தில் பெலகாவியில் நேற்று மாபெரும் பேராட்டம் நடத்த, எம்.எம்.இ.எஸ்., எனப்படும், மத்தியவர்தி மஹாராஷ்டிரா ஏக்கிகரன் சமிதி என்ற அமைப்பு அழைப்பு விடுத்தது.

இதை தவிர, சிவசேனா உத்தவ் பிரிவு, காங்கிரஸ், தேசியவாத காங்., உட்பட 60க்கும் மேற்பட்ட அமைப்புகளும் பெலகாவியில் நேற்று போராட்டம் நடத்த திட்டமிட்டன.

கைது

சிவசேனா உத்தவ் பிரிவைச் சேர்ந்த எம்.பி.,யும், எல்லைப் பிரச்னை நிபுணர் கமிட்டியின் தலைவருமான தைரியசீல் சம்பாஜிராவ் மானே நேற்று பெலகாவி வந்தார்.

அங்கு ஏற்பாடு செய்யபட்டிருந்த கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசுவதாக இருந்தது. சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்ற காரணத்தால், பெலகாவி மாவட்ட நிர்வாகம் அவரை எல்லைக்குள் அனுமதிக்க மறுத்தது.

சிவசேனா உத்தவ் பிரிவு, காங்கிரஸ், தேசியவாத காங்., தொண்டர்கள் 300க்கும் மேற்பட்டோர் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.

தேசியவாத காங்.,கைச் சேர்ந்த ஹசன் முஷ்ரிப், சிவசேனாவைச் சேர்ந்த கோலாப்பூர் மாவட்ட தலைவர் விஜய் தேவானே உட்பட சிலர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டனர்.

சட்டசபையில் அமளி!

கர்நாடகா சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ., அரசின் கடைசி குளிர்கால கூட்டத் தொடர் நேற்று துவங்கியது. அப்போது சுதந்திர போராட்ட வீரர், மறைந்த வீர் சாவர்க்கரின் புகைப்படத்தை பா.ஜ., அரசு சட்டசபையில் வைத்ததற்கு, காங்., கடும் கண்டனம் தெரிவித்தது. சட்டசபையில் ஜவஹர்லால் நேரு புகைப்படத்தை தாங்கியபடி காங்., உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.