சேலம்: “ராகுல் காந்தி, கமல்ஹாசன் சந்திப்பால் அரசியல் மாற்றம் எல்லாம் ஏற்படாது. இந்தச் சந்திப்பை வரவேற்கிறோம்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி சேலத்தில் பல்வேறு பகுதிகளில் இந்திய ஒற்றுமைப் பயண நினைவு கொடியேற்றம் மற்றும் கல்வெட்டு திறப்பு விழாவில் இன்று (டிச.19) பங்கேற்றார். சேலம் அருகே வட்ட முத்தம்பட்டியில், ஒற்றுமை நினைவு கொடி ஏற்றி வைத்து, செய்தியாளர்களிடம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியது: “இந்தியாவில் பாஜக கட்சி பொய்யான நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. உலகம் முழுவதும் 5400 மதங்கள் உள்ளன. ஏறக்குறைய பாதி மதங்கள் இந்தியாவில் உள்ளன. ஆனால், பாஜக ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே இறைவழிபாடு என்று கூறுகிறது. இது சாத்தியமற்றது.
பல மதங்கள், பல இறை வழிபாடுகள் உள்ள நாட்டில் ‘வேற்றுமையில் ஒற்றுமை’தான் சாத்தியம். எல்லா மதங்களுக்கும், மொழிகளுக்கும் சம உரிமை உள்ளது என அரசியலமைப்பு சட்டத்தில் எழுதப்பட்டுள்ளது. இதனை பாஜக மாற்ற நினைக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துதான் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்திய எல்லையில் சீன ராணுவம் ஆக்கிரமிப்பு செய்துள்ளது குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு விளக்கி கூறியிருக்க வேண்டும். ஆனால், பிரதமர் மோடி, இதுவரை மவுனம் காக்கிறார். இதை தமிழக காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
சேலம் இரும்பாலை நஷ்டத்தில் இயங்குவதாக சொல்லும் பாஜக அரசு, அதை தனியாருக்கு கொடுக்க முயற்சிக்கிறது. நஷ்டத்தில் இயங்கும் இரும்பாலையை எப்படி தனியார் வாங்க முடியும். வட மாநிலங்களில் அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனைகள் பணிகள் முடித்து, பிரதமர் மோடி திறந்து வைத்துவிட்டார். ஆனால், தமிழகத்தில் செங்கலை கூட வந்து இறக்கவில்லை. தமிழகத்தில் உள்ள பாஜகவுக்கு இதில் பங்கு இல்லையா, பொறுப்பில்லையா என்ற கேள்வி எழுகிறது.
பெரு முதலாளிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யவில்லை என்று நிர்மலா சீதாராமன் கூறுவது தவறான வாதம். ரிசர்வ் வங்கியில் ஆண்டு வரவு-செலவு திட்டத்தில், பட்ஜெட்டில் கடனை காட்டவில்லை. வாங்கிய கடனை காட்டவில்லை என்றால் கடன் முடிந்து விட்டதாகத்தான் அர்த்தம். இதனை மன்னிக்க முடியாது.
தமிழக அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்களின் போராட்டம் என்பது அரசியல் நடவடிக்கையாக கருத முடியாது. தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை கேட்கிறார்கள். எந்த ஒரு கோரிக்கையும் ஒரு அரசு 100 சதவீதம் முடித்துவிட முடியாது. எதிர்க்கட்சியாக இருந்தாலும் கூட, தமிழக அரசின் நடவடிக்கை என்பது தவறை சுட்டிக்காட்டினால், தமிழக முதல்வர் தவறை திருத்திக் கொள்கிறார். எனவே, தொழிற்சங்கங்களின் கோரிக்கையை முதல்வர் ஸ்டாலின் பரிசீலிப்பார்.
கறவைமாடு வைத்திருக்கும் விவசாயிகள் தீவன விலை உயர்ந்தாதல், பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். கொள்முதல் விலையை உயர்த்தும் போது, ஆவின் பால் விலையும் உயரத்தான் செய்யும். சில விஷயங்களை சந்தைகளே முடிவு செய்யும். பாலுக்கு வரி போட்டு, அதனால், விலை ஏற்றம் கண்டால் தான் தவறு.
புதுச்சேரி முதல்வர் சுதந்திரமாக பேச அனுமதித்துள்ளோம் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகிறார். முதல்வர் ஒரு கருத்தை சொல்வதற்கு அனுமதித்துள்ளோம் என்று கூறுவது எவ்வளவு பெரிய சர்வாதிகாரமாக உள்ளது. ராகுல் காந்தி, கமலஹாசன் சந்திப்பு அரசியல் மாற்றம் எல்லாம் ஏற்படாது. இந்தச் சந்திப்பை வரவேற்கிறோம். கமல்ஹாசன் தேசியஉ ணர்வு படைத்த பண்பாளர். மக்களிடையே செல்வாக்கு பெற்ற கமலஹாசன், ராகுல் காந்தியுடன் நடைபயணம் செல்வதை வரவேற்கிறேம்” என்று அவர் கூறினார்.