சென்னை: சென்னையில் விட்டு வசதி வாரியயத்தின் பழைய குடியிருப்புகள் இடித்துவிட்டு மீண்டும் குடியிருப்பு கட்டப்படும் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்து உள்ளார். ஏற்கனவே6 பழுதடைந்துள்ள 61 இடங்களில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கட்டடங்களை இடித்துவிட்டு புதிதாக கட்ட திட்டமிட்டு உள்ளதாகவும் கூறினார்.
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம், கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள், நகர் ஊரமைப்பு இயக்ககம் மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் ஆகிய துறைகள் இயங்குகின்றன.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், குறைந்த வருவாய் பிரிவு, மத்திய வருவாய் பிரிவு, உயர் வருவாய் பிரிவு ஆகிய மக்களின் வீட்டு வசதித் தேவையை, தனது சுயநிதித் திட்டம், தவணைமுறை திட்டம் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் வாடகை குடியிருப்புத் திட்டம் ஆகிய திட்டங்களின் மூலம் நிறைவேற்றுகிறது.
இந்த நிலையில், இன்று நந்தனத்தில் 102 வீடுகளை கொண்ட 17 அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகளை அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்து சாமி , சென்னையில், 61 இடங்களில் உள்ள வீட்டு வசதி வாரிய வாடகை குடியிருப்பு கட்டடங்களை இடித்து மீண்டும் கட்டித் தரப்படும் என்றும், புதிய வாடகை அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தரப்படும் என்றும் கூறினார்.
வீட்டு வசதி வாரியத்தின் சுயநிதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வீடுகள் பல இடங்களில் மோசமாக உள்ளது.10 ஆயிரம் வீடுகளை இடித்து, அந்த இடங்களில் 30 ஆயிரம் வீடுகள் வரை கட்ட திட்டம் தீட்டியுள்ளனர். விற்கப்படாத வீடுகளை வாடகைக்கு விட திட்டமிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் முத்துசாமி பேட்டி அளித்துள்ளார். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் விற்பனை செய்யப்படாமல் நீண்டகாலமாக காத்திருப்பில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை விரைந்து விற்பனை செய்ய புதிய திட்டத்தை தமிழக அரசு கையில் எடுக்க உள்ளது. தனியார் கட்டுமான நிறுவனங்களைப் போன்று, இக்குடியிருப்புத் திட்டங்களையும் விற்பனை செய்ய முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. வீடுகளை வாங்க நினைக்கும் தனி நபர்களை நேரடியாக வாரியக் குடியிருப்புகளுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு பிடித்தமான வீடுகளை முன்பதிவு செய்யும் புதிய திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது என்றும் தெரிவித்தார்.