காபூல்: ஆப்கன் பெண்களை கல்வி கற்க அனுமதியுங்கள் என்று அந்நாட்டு கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் தெரிவித்துள்ளார்.
மறு அறிவிப்பு வரும் வரை பெண்களுக்கு அனுமதி இல்லை. ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க இடைக்கால தடை விதித்து தலிபான் அரசு உத்தரவிட்டது.தலிபான்கள் அறிவிப்பை கேட்டு, ஆப்கன் பெண்கள் பலர் பல்கலைக்கழக வகுப்பு அறையிலேயே கண்ணீர் விட்டு அழுதனர். மேலும் இன்று பல்கலைக்கழங்களுக்கு வந்த மாணவிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
மேலும் நாடு முழுவதிலும் தலிபான்களின் முடிவை எதிர்த்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் ஆப்கன் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் தலிபான்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து ஆப்கன் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் தனது சமூக வலைதள பக்கத்தில், “அறிவைப் பெறுவது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும் என்று இறைவன் கூறுகிறார். அறிவை பெறுவது முக்கியமானதாகும். மனித சமூகத்தின் அடித்தளமே பெண்கள்தான். பெண்கள் காப்பாளர்கள்.
அவ்வாறு இருக்கையில் கல்வியறிவு இல்லாத பெண்களிடம் குழந்தைகளை ஒப்படைப்பதை ஏற்று கொள்ளமுடியாது.
பெண்களை கல்வி கற்க அனுமதியுங்கள்.” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில் தலிபான்களின் இந்த உத்தரவுக்கு துருக்கி, சவுதி ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
முன்னதாக கடந்த 2021 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின்படியே ஆட்சி என்று அறிவித்தனர். அதேவேளையில், கடந்த முறையைப் போல் ஆட்சி இருக்காது. பெண் கல்வி, பெண் சுதந்திரம் பேணப்படும், உலக நாடுகளுடன் நட்புறவு ஏற்படுத்தப்படும் என்று உறுதியளித்தனர். ஆனால், தலிபான்களின் ஆட்சி அவ்வாறாக நடைபெறவில்லை.
மாறாக பெண்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை தலிபான்கள் அமல்படுத்தி வருகின்றனர்.