ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் பலிஜா இன மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டார்-முன்னாள் எம்எல்ஏ குற்றச்சாட்டு

திருப்பதி : ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் பலிஜா இன மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டார் என்று முன்னாள் எம்எல்ஏ சுகுணா குற்றம் சாட்டியுள்ளார்.திருப்பதியில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் தெலுங்கு தேசம் கட்சி முன்னாள் எம்எல்ஏ சுகுணா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:ஆந்திர மாநிலத்தில் பலிஜா மக்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு நன்மை செய்வதாக முதல்வர் ஜெகன்மோகன் கூறினார். மேலும், இவர்களின் வாக்குகளை பெற்று முதல்வர் ஜெகன்மோகன் வெற்றி பெற்றார்.

ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அவைகளை மறந்து விட்டார். 5 சதவீதம் இட ஒதுக்கீடு பலிஜா பிரிவினருக்கு அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. ஆனாலும், முதல்வர் ஜெகன்மோகன் உரிய நடவடிக்கை எடுக்காமல் பலிஜா பிரிவினருக்கு துரோகம் இழைத்து வருகிறார். தெலுங்கு தேசம் ஆட்சியில் திருப்பதியில் பலிஜா நல கட்டிடம் அமைக்க ₹2 கோடி மதிப்பிலான நிலத்தையும், கட்டிட பணிகளுக்காக ₹2 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆனால், முதல்வர் ஜெகன்மோகன் இந்த பணிகளை கிடப்பில் போட்டுள்ளார். ஒதுக்கப்பட்ட நிலம் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆதரவுடன் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி உள்ளது. இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.