தாய்ப்பால் வங்கிகளில் பாலூட்டும் தாய்மார்கள் தானமாக வழங்கும் தாய்ப்பால் இந்திய சந்தையில் ஒரு மில்லி லிட்டர் ரூ. 30 முதல் ரூ. 110 வரை விற்பனை செய்யப்படுகிறது.
ஏழைத் தாய்மார்கள் புண்ணியத்திற்கு பால் கொடுத்தால் அதை பணம் படைத்தவர்களிடம் அதிகவிலைக்கு விற்று லாபம் சம்பாதிக்கும் தொழில் அமோகமாக நடைபெற்று வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
பெங்களூரைச் சேர்ந்த நியோலேக்டா லைப்சயின்சஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் மொஹாலியைச் சேர்ந்த நெஸ்லாக் பயோசயின்சஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இந்தியாவில் தாய்ப்பாலை விற்பனை செய்யும் தொழிலில் இறங்கியுள்ளது.
தாய்ப்பாலை விற்பனை செய்வது இந்திய அரசால் இதுவரை வரைமுறை படுத்தப்படாத நிலையில் இதற்கான காப்புரிமையை இவ்விரு நிறுவனங்களும் பெற்றிருக்கின்றன.
குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் மற்றும் ஊட்டச்சத்து குறைவான குழந்தைகள் தவிர போதிய தாய்ப்பால் சுரக்காத தாய்மார்களுக்கு உதவும் வகையில் இந்தியாவில் மொத்தம் 110 தாய்ப்பால் வங்கிகள் உள்ளன.
இவற்றில் 90 தாய்ப்பால் வங்கிகள் அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் உள்ளன மற்றவை தனியார் மருத்துவமனைகளில் உள்ளது.
ஆண்டிற்கு 35 லட்சம் குழந்தைகள் குறைமாதத்தில் பிரசவிப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தாய்ப்பால் தேவை அதிகரித்துள்ளது ஆனால் இதனை ஈடுசெய்ய போதுமான தாய்ப்பால் வங்கிகள் இல்லை என்ற நிலை உள்ளது.
இந்தியாவின் தாய்ப்பால் தேவைக்கு 1300 தாய்ப்பால் வங்கிகளாவது தேவைப்படும் என்று தனியார் நிறுவனங்கள் மேற்கொண்ட கணக்கெடுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தாய்ப்பால் வங்கிகளுக்கு தாய்ப்பாலை தானமாக கொடுக்கும் தாய்மார்களுக்கு எந்தவிதமான ஊக்கத்தொகையும் வழங்கப்படுவதில்லை என்ற போதும் தாய்ப்பால் தேவை இருப்பவர்களிடம் இருந்து ஒரு குறைந்தபட்ச தொகை வசூலிப்பது தற்போது நடைமுறையில் உள்ளது.
இந்த நிலையில் நியோலேக்டா என்ற நிறுவனம் 15 மி.லி. கொண்ட தாய்ப்பால் பாக்கெட்டை ரூ. 450 க்கும், 5 மி.லி. கொண்ட செறிவூட்டப்பட்ட தாய்ப்பால் பாக்கெட் ஒன்று ரூ. 550 க்கும் விற்பனை செய்கிறது.
நியோலேக்டா நிறுவனம் தாய்ப்பாலை தாய்மார்களிடம் இருந்து வாங்கி 17 படிப்படியான செயல்முறைகளை கொண்டு செறிவூட்டுவதால் இதனை தாய்ப்பால் வங்கி என்று அழைப்பதில்லை.
அதேவேளையில் நெஸ்லாக் நிறுவனம் தாய்ப்பாலை பவுடர் வடிவில் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
இவ்விரு நிறுவனங்களும் இதனை ஆயுர்வேத பால் என்ற பெயரில் பதிவு செய்து உணவு பாதுகாப்பு துறையிடம் உரிமம் பெற்று விற்பனை செய்து வருகின்றன.
இருந்தபோதும் இந்நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியதை அடுத்து தற்போது இவ்விரு நிறுவனங்களின் உரிமையும் முடக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த நிறுவனங்கள் உலக தரத்திற்கு நிகரான உணவு பாதுகாப்பு அம்சங்களுடன் இவற்றை தயாரித்து வருவதாக கூறிவருவதுடன் தடைகளை தகர்த்து மீண்டும் விற்பனையை துவக்க தேவையான நடவடிக்கைகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளன.