புதுடெல்லி:“இந்தியாவில் இஸ்லாமியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்குத் தீர்வு, நாட்டை விட்டு வெளியேறுவது அல்ல” என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்கு உள்ளான சித்திக்கியின் பேச்சு: இந்தியாவில் இஸ்லாமியர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இல்லை என்பதால், வெளிநாட்டில் படிக்கும் தனது மகனையும், மகளையும் அங்கேயே வேலைதேடிக்கொண்டு வாழுமாறு தான் கூறிவிட்டதாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் அப்துல் பாரி சித்திக்கி கூறி இருந்தது தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியது, தற்போது வைரலாகி உள்ளது. இந்நிலையில், இது குறித்து இன்று (டிச. 23) விளக்கம் அளித்துள்ள சித்திக்கி, தான் கூறியது தவறாக பொருள் கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பரூக் அப்துல்லா பேட்டி: சித்திக்கி கூறியது தொடர்பாக தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லாவிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, “சித்திக்கி கூறியது உண்மைதான். இந்தியாவில் வெறுப்புணர்வு அதிகரித்திருக்கிறது. ஆனால், இந்தியாவில் இருந்து வெளியேறுவது இதற்கு தீர்வாகாது. நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து இந்த வெறுப்புணர்வுக்கு முடிவு கட்ட வேண்டும். நாடு வாழ வேண்டுமானால், அனைத்து மதத்தவர்களும் சகோதாரத்துவத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
ஷாருக்கானின் புதிய படத்தில் காவி நிற ஆடை அணிந்தது தற்போது சர்ச்சையாகி உள்ளது. காவி நிறம் இந்து மதத்திற்கு மட்டும் சொந்தமானதா? பச்சை நிறம் இஸ்லாம் மதத்திற்கு மட்டும் சொந்தமானதா? பசு இந்துக்களுக்கு மட்டும் சொந்தமானதா? எருது இஸ்லாமியர்களுக்கு மட்டும் சொந்தமானதா? இது எப்படி சரியாக இருக்கும்?” என பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.