ஸ்ரீநகர்,
நடிகர் ஷாருக்கான், தீபிகா படுகோனே நடித்த ‘பதான்’ இந்திப் படத்தின் ‘பேஷரம் ரங்’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. அந்த பாடலில் தீபிகா படுகோனே காவி நிற ஆடை அணிந்து இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. பதான் பட பாடலுக்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.
மத்திய பிரதேசம் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் ஷாருக்கான் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது. இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்து வருகின்றன. நாடாளுமன்றம் வரை இந்த விவகாரம் பேசுபொருளாக மாறியது.
இந்த நிலையில் காஷ்மீர் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஷாருக்கான் நடித்த படத்தில் காவி நிற உடை அணிந்த விவகாரம் சர்ச்சையாகியுள்ளது. காவி நிறம் இந்துக்களுக்கு சொந்தமானது என்றும், பச்சை நிறம் இஸ்லாமியர்களுக்கு சொந்தமானது என்றும் ஆகிவிடுமா?
இந்தியாவில் சமீப காலமாக வெறுப்புணர்வு அதிகரித்துள்ளது என்பது உண்மை. நாட்டை விட்டு செல்வது இதற்கு தீர்வாகாது. ஒற்றுமையாக இருந்து வெறுப்புணர்வை அழித்துக் காட்ட வேண்டும். இந்தியாவை பாதுகாக்க அனைத்து மதத்தினரும் சகோதரத்துவத்தை பின்பற்ற வேண்டும்” என்று பரூக் அப்துல்லா தெரிவித்தார்.