திருவனந்தபுரம்: பிஎப் 7 கொரோனா கடந்த ஜூலை மாதமே கேரளாவில் சிலருக்கு பரவியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது உருமாற்றம் அடைந்த பிஎப் 7 வகை கொரோனா வைரஸ் மீண்டும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இது சீனாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சில நாடுகளிலும் பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் பரவாமல் இருக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பிஎப் 7 வகை கொரோனா கடந்த ஜூலை மாதமே கேரளாவில் சிலருக்கு கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நோய் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்றும், விரைவில் குணமடைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலை இதுவரை கேரள அரசு வட்டாரங்கள் உறுதிப்படுத்தவில்லை. கேரளாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.