புதுடெல்லி: ‘வெளிநாட்டு ஹேக்கர்களை தடுக்க ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?’ என மாநிலங்களவையில் திமுக எம்பி கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் கேள்வி எழுப்பி உள்ளார். மாநிலங்களவையில் திமுக எம்பி வில்சன் எழுப்பிய கேள்வியில், ‘கடந்த 2019ம் ஆண்டு முதல் இன்று வரை தமிழகம் உட்பட நாடு முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும் பேஃம் திட்டத்தின் 2ம் கட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மற்றும் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியின் அளவு என்ன, இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் மூலம் வாகனங்களில் கலப்பின மற்றும் மின்சார தொழில்நுட்பத்திற்கு மாறுவது வழக்கமான வாகனங்களைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துமா, அப்படி இருக்கும் பட்சத்தில் அரசு அதனை தீர்க்கும் விதமாக ஏதேனும் ஆய்வுகளை மேற்கொண்டு உள்ளதா?’ என கேட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த கனரக தொழில்துறைக்கான மாநில அமைச்சர் ஸ்ரீகிருஷ்ணன் பால் குர்ஜார், ‘‘தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு பான் இந்தியா அடிப்படையில் பேஃம் திட்டத்தை கனரக தொழில்துறை அமைச்சகம் உருவாக்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் முழுவதும் 68 நகரங்களில் 2,877 சார்ஜிங் நிலையங்களுக்கு ஒன்றிய அமைச்சகம் அனுமதித்துள்ளது’’ என தெரிவித்தார்.
மாநிலங்களவையில் திமுக எம்பி கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எழுப்பிய கேள்வியில், ‘அந்நிய நாடுகளை சேர்ந்த ஹேக்கர்களால் இந்திய சர்வர்கள் ஹேக் செய்யப்பட்டிருப்பது உண்மையா, அப்படியானால் அதன் விவரங்கள் என்ன, அதுபோன்ற செயல்பாடுகளால் ஏற்பட்ட வருவாய் பாதிப்பு எவ்வளவு, அதனை தடுக்க ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?’ என்று கேட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கான இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், ‘‘வெளிநாட்டு ஹேக்கர்களின் பாதிப்பு இருப்பது உன்மைதான். இந்த விவகாரத்தை பொருத்தமட்டில் இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை அரசு முழுமையாக அறிந்திருக்கிறது. இதுபோன்ற பிரச்சனைகளை காண்காணிக்க தான் இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இது 150 பாதுகாப்பு தணிக்கை அமைப்புகளை ஆதரிக்கும் வலிமை கொண்டது மட்டுமில்லாமல், கணினிகள் மற்றும் நெட்வொர்க்குகளை தொடர்ந்து பாதுகாப்பதற்கான எதிர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது’’ என தெரிவித்தார்.