அதிமுகவில் அனைவரையும் ஒன்றிணைக்கும் பணியை நான் தொடங்கிவிட்டேன். அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது. நான் யார் பக்கமும் இல்லை, அனைவருக்கும் பொதுவான நபராக செயல்படுகிறேன் என்று சசிகலா தெரிவித்தார்.
சென்னை கீழ்ப்பாக்கம் கருணை இல்லத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் சசிகலா பங்கேற்றார். அங்கு கேக் வெட்டி கொண்டாடிய சசிகலா ஆதரவற்றோருக்கு புத்தாடைகள், கேக் உள்ளிட்டவைகளை வழங்கினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “நான் யார் பக்கமும் இல்லை, அனைவருக்கும் பொதுவான நபராக செயல்படுகிறேன். நான் இருக்கும் வரை அதிமுக தொண்டர்கள் சோர்வடையமாட்டார்கள். அதிமுகவில் அனைவரையும் ஒன்றிணைக்கும் பணியை நான் தொடங்கிவிட்டேன். அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது. ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் மாறி மாறி ஒருவருக்கொருவர் விமர்சனத்தை முன்வைக்கிறார்கள்.
கரும்பு விவசாயிகள் பாதிக்கக்கூடாது என்பதற்காகவே ஜெயலலிதா ஒவ்வொரு ஆண்டும் கரும்பு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கரும்பு என வழங்கினார்.
திமுக தேர்தல் அறிக்கையில் கூறுவது ஒன்றும், செயல்படுத்துவது வேறொன்றாகவும் உள்ளதை மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள். மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தாமல் இருந்தால் அதற்கான முடிவை மக்களே பார்த்துக் கொள்வர்.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது வெளிநாடு அழைத்து சென்று மருத்துவம் பார்க்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். ஆனால், வெளிநாடு சிகிச்சைக்கு பரிந்துரைத்தபோது, ஜெயலலிதாவே அதை வேண்டாம் என கூறினார். மருத்துவர்களை இங்கே வரவழைத்து சிகிச்சை பெறவே அவர் விரும்பினார்” என்று கூறினார்.