நாகர்கோவில் : தமிழகத்தில் ஜனவரியில் 708 ஆஸ்பத்திரிகளை ஒரே நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அழகப்பபுரம் பேரூராட்சி காணிமடத்தில் ரூ.25 லட்சம் செலவில் துணை சுகாதார நிலைய கட்டடத்தை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்து பேசுகையில், புதிய கொரோனா குறித்து தமிழ்நாடு அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புதிய வைரஸ் பரவலை கண்டு தமிழக மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை.
தமிழகம் முழுவதும் 708 நகர்ப்புற நல வாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி 21 மாநகராட்சி, 63 நகராட்சிகளில் இந்த நகர்ப்புற நல வாழ்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
ஒரு மருத்துவர், ஒரு மருந்தாளுனர், உதவியாளர் என பல்வேறு வசதிகளுடன், இந்த மருத்துவமனை இயங்கும். பொங்கலுக்கு பிறகு, ஒரே நாளில் 708 மருத்துவமனைகளையும் முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைப்பார். முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் டயாலிசிஸ் சிகிச்சையையும் கலைஞர் காப்பீடு திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது, என்றார்.