புதுடெல்லி: ராணுவ வீரர்கள் கரோனா கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்று இந்திய ராணுவம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: “ராணுவ வீரர்கள் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும். மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். அடிக்கடி கைகளைக் கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சானிடைசரை பயன்படுத்த வேண்டும்.
கரோனா அறிகுறி இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பரிசோதனையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். மிதமான பாதிப்பு முதல் தீவிர பாதிப்பு வரை இருப்பவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிக அளவில் இல்லை என்ற போதிலும், சீனா, ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அதிகம் இருப்பதால் மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது. கரோனா தொற்று அதிகமாகப் பரவத் தொடங்கினால் அதை எதிர்கொள்வதற்குத் தற்போதே தயாராக வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.