நெல்லை: நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே உள்ள மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ மையத்தில் நடைபெற்ற கிரையோஜனிக் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி பெற்றது. மகேந்திரகிரியில் உள்ள சோதனை தளத்தில் கிரையோஜனிக் என்ஜின் சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. ஜிஎஸ்எல்வி ராக்கெட்டில் பொருத்தக்கூடிய கிரையோஜனிக் என்ஜின்களை இந்திய தொழில்நுட்பத்தில் இஸ்ரோ வடிவமைத்து சோதனை செய்தது.
600 விநாடிகள் கிரையோஜனிக் என்ஜினை தொடர்ச்சியாக இயக்கி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கிரையோஜெனிக் எஞ்சின் மிக சக்திவாய்ந்த இஞ்சின் வகைகளுள் ஒன்று. இது விண்வெளி ஆய்வுக்கான ராக்கெட்களில் பயன்படுத்தப்படுவது. இவ்வகை எஞ்சின்கள் புவிஈர்ப்பு விசையை எதிர்க்கும் மிக அதிக உந்து சக்திக்கும் மிக நீண்டதூரம் பயணிக்கவும் உதவுபவை என்பது குறிப்பிடத்தக்கது.